×
Saravana Stores

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வை இன்று 4846 பேர் எழுதுகின்றனர் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 மையங்களில்

திருவண்ணாமலை, ஜூலை 13: திருவண்ணாமலை மாவட்டத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தேர்வு 16 மையங்களில் இன்று நடக்கிறது. அதில், 4846 பேர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 நிலையிலான அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வை இன்று (13ம் தேதி) நடத்துகிறது. அதன்மூலம், துணை கலெக்டர், டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்பட 90 பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், குரூப் 1 போட்டித் தேர்வில் பங்கேற்க அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் உள்ளிட்ட உயர் கல்வித் தகுதியுள்ளவர்கள் உள்பட சுமார் 3 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், குரூப் 1 முதல் நிலை போட்டித் தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி, பகல் 12.30 மணி வரை நடக்கிறது. தேர்வு மைய அனுமதி சீட்டு (ஹால் டிக்கெட்) ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் ஆவணமாக, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றின் நகலை எடுத்துவர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடங்கும் அரை மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மைய நுழைவு வாயில் மூடப்படும். அதன்பிறகு, யாரையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், மொத்தம் 4,846 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு எழுத உள்ளனர். அதையொட்டி, திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி, கரன் கலை அறிவியல் கல்லூரி, கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்கேபி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 6 இங்களில் 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் 16 கண்காணிப்பு அலுவலர்கள், கண்காணிக்க 16 மொபைல் யூனிட், ஒரு பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 வீடியோ கிராபர்கள் மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை போட்டித் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஆர்டிஓ மந்தாகினி மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது, தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை செய்திட வேண்டும், தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள வழி்காட்டுதல் நெறிமுறைகளை, தேர்வு மைய கண்காணிப்பாளர் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். மேலும், தேர்வு மையங்களுக்கு வினா, விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவும், தேர்வு முடிந்ததும் அவற்றை மீண்டும் பாதுகாப்பாக தேர்வாணையத்திடம் ஒப்படைக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

The post டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வை இன்று 4846 பேர் எழுதுகின்றனர் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 மையங்களில் appeared first on Dinakaran.

Tags : DNPSC Group- ,Tiruvannamalai district ,Tiruvannamalai ,TNPSC Group 1 ,Tamil Nadu Government Personnel Selection Board ,TNPSC) Group 1 ,DNBSC ,Group ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் சென்னை வாலிபர் கைது