நோன்பின் பெருமை
தை மாதம் – ஒரு வேளை உணவு உண்ண வேண்டும்.
மாசி மாதம் – இரவு மட்டும் உணவு உண்ண வேண்டும்.
பங்குனி மாதம் – கிடைத்ததை உண்டால் போதும்.
சித்திரை மாதம் – இலை தழைகளை உண்ணுதல் சிறப்பான பலனை தரும்.
வைகாசி மாதம் – எள்ளுப் பொடி மட்டும் உண்ணுவது சிறப்பு.
ஆனிமாதம் – சந்திராயன விரதம் மேற்கொள்ளுதல் அவசியம்.
ஆடி மாதம் – பசுவின் பஞ்சகவ்யம் துளி ருசித்தால் போதும்.
ஆவணி மாதம் – பால் மட்டும்
அருந்துதல் வேண்டும்.
புரட்டாசி மாதம் – தண்ணீர் தவிர வேறு உண்ணல் ஆகாது.
ஐப்பசி மாதம் – தர்ப்பைப் புல்லில் நிற்கும் பனி நீர் பருகுதல்.
கார்த்திகை மாதம் – காற்றைச் சுவாசித்து கடுமையான விரதம் இருக்க வேண்டும்.
மார்கழி மாதம் – முழு பட்டினி
தை மாதத்தில் மீண்டும் யாழ் எடுத்து, இசை மீட்டி மீனாட்சியம்மன் கோயிலில் பாடினாள். உமையவள் மனம் இரங்கினாள். வித்தியாவதியின் முன் மூன்று வயது சிறுமியாக தோன்றி அவளுடன் விளையாடினாள். “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’’ என்றாள். “தாயே! கருணையின் கற்பகத் தருவே! நீயே எனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும். உன்னைத் தாலாட்டி பாராட்டி வளர்க்க ஆசைப்படுகிறேன். இவ்வரத்தை அருள வேண்டும் என வேண்டினாள்’’. உமையவளும் மகிழ்ந்து, “நீ எண்ணியது நடக்கும்’’ எனக் கூறி மறைந்தாள். அந்த வித்தியாவதி பெண்ணே காஞ்சனா மாலையாக மறுபிறவி எடுத்து, மலையத்துவஜனை மணந்தாள் என்று அகத்தியர் கதையைக் கூறி முடித்தார்.
தடாதகையின் பிறப்பு
காஞ்சனா மாலை, தனக்கு பிள்ளைப்பேறு இல்லாததால் கணவனுடன் சேர்ந்து பல கோயில்களுக்கு சென்றாள். யாக பூஜைகள், விரதங்கள் போன்றவற்றை கடைப்பிடித்தாள். பிள்ளை வேண்டும் என்று எண்ணிய போது, முனிவர்கள் புத்திர காமேட்டி வேள்வி செய்தால், நிச்சயம் பிள்ளைப் பேறு கிடைக்கும் எனக் கூறியதும், அவ்வேள்வியை செய்தனர். அதற்கு தேவையான பொருள்கள்; பழங்கள், நெய், பொரி இதையெல்லாம் ஆகுதியாகக் கொடுக்கின்றபொழுது, நெருப்பிலிருந்து ஓர் அழகிய குழந்தை எழுந்து வந்து காஞ்சனா மாலையின் மடியில் தவழ்ந்தது. அக்குழந்தைக்கு, தடாதகை பிராட்டி எனப் பெயர்ச் சூட்டி, அன்புடன் வளர்த்தனர்.
சொக்கனிடம் முறையிடல்
மலையத்துவஜன், குழந்தையின் அழகைக் கண்டு மகிழ்ந்தார். ஆனால், அவளிடம் தோன்றிய வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு மன வருத்தம் அடைந்தார். சொக்கநாதனிடம், முறையிட்டு, “அழகான பிள்ளையைக் கொடுத்தாய். ஆனால், அவளுக்கு ஏன் வித்தியாசமாக மூன்று முலைகளை படைத்தாய். நான் என் செய்வேன்?’’ என்று கதறினார். அப்போது அசரீரி தோன்றியது, “வருத்தப்படாதே பாண்டியனே, அவள் வீர மங்கையாக வளருவாள். அவள் முன் திடகாத்திரமான வீரபுருஷன் எதிர்ப்படும் பொழுது, மூன்றாவதாக இருக்கின்ற முலையானது, மறைந்துவிடும். அவனே அவளின் மணாளன் ஆவான்’’ என்றுகூறி மறைந்தது. அதன் பின்பு, தன் மகளுக்கு வாள் பயிற்சி, குதிரை ஏற்றம், யானை ஏற்றம், போர்ப் பயிற்சி அளித்து ஆண்மகனைப் போன்று வளர்த்தார்.
தனக்கு ஆண்மகன் இல்லை என்ற வருத்தம் தெரியாமல் அவளுக்கு முடிசூட்டி ஆட்சிப்பொறுப்பை அவளிடம் ஒப்படைத்து மகிழ்ந்தார். அவளும் நாற்திசைக்கும் சென்று, அனைவரையும் அடக்கி வருவேன் என்று கிளம்பினாள்.இமயமலை, மேருமலை என்ற அத்தனை மலையில் இருக்கின்ற அரசர்களை அடக்கியபோது, சிவன் வீற்றிருக்கும் கைலாய மலைக்குச் சென்றாள். அங்கே சிவபெருமான் முன் தோன்றியதும், மூன்றாவது முலையானது மறைந்தது.
உடனே அவள் வெட்கப்பட்டாள். ஏனென்றால், தன்னுடைய கணவன் இவரே என்று அறிந்தாள். சிவபெருமான், சுந்தரபாண்டியனாக மதுரைக்கு எழுந்தருளுகிறார். அதன்பின்பு திருமணம்
நடைபெற்றது.சில காலங்களில் மலையத்துவஜன் சிவபதவி அடைகின்றார். மகனில்லாத தேசத்திற்கு சுந்தரபாண்டியன் மன்னனாக முடிசூட்டி ஆட்சி செய்ய வேண்டும் என்று காஞ்சனா மாலை கேட்டுக் கொண்டாள். அதன்படி இங்கே இருந்து சிறப்பாக ஆட்சி செய்கின்றார்.
மதுரையில் சத்சங்கம்
எப்பொழுதும் காட்டிலே வாழக் கூடிய முனிவர்கள், ரிஷிகள், தவயோகிகள், சுந்தரரிடம் வந்து பேசுவது இயல்பு. அவ்வாறு சங்கம் கூடுகின்ற பொழுது, ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. கௌதம முனிவர் என்பவர், தவசீலர். பாண்டியனைக் கண்டு, சங்க கூட்டத்தில் பேசிவிட்டு செல்லும் பொழுது, காஞ்சனா மாலை எதிர்ப்பட்ட அவரை உபசரித்து பொன் ஆசனம் இட்டு அமரச் செய்தாள். உங்களிடத்தில் சில ஐயங்களை கேட்டு தெளிவுபெற விரும்புகிறேன் என்றாள்.
அவர் சிரித்துக்கொண்டே மலையத்துவஜனின் தர்ம பத்தினி யாருக்கும் கிடைக்காத பேரை பெற்றவள். சிவபெருமான் உன் மருமகனாக கிடைக்கப் பெற்றது தவ ஆற்றலின் மகிமை, உமையவளே மகளாகவும் பிறந்திருக்கும் பொழுது, உனக்கென்ன சந்தேகம் தாயே? கேளுங்கள் எடுத்துரைக்கின்றேன்.
1. தவம் என்றால் என்ன?
2. தவத்திற்காக அவசியம் என்ன?
3. தவத்தால் என்ன பயன் விளையும்?
இந்த மூன்று வினாக்களுக்கு தாங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டாள்.
அன்னையே இந்த லோகத்திலே ஒவ்வொரு மனிதப் பிறவியும் தவம் செய்து மேலான பதவியை அடைய வேண்டும். தவத்தினுடைய பயன் பற்றி வேத நூல்கள் என்ன சொல்கிறது என்றால்,
1. மானசம், 2. வாசிகம், 3. காயிகம் இதில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வாழ்க்கைக்கரையை ஏற வேண்டும். இம்மூன்றையும் விளக்கமுடியுமா? என்று கேட்டாள். மானசம் – சிவனை நினைத்து, தியானித்து, ஐம்புலன்களையும் நாம் அடக்கி, தான தர்மங்கள் செய்தோம் என்றால், அதுதான் மானசம். எனப்படும்.
வாசிகம் – வேத பாராயணம் ஐந்து எழுத்து மந்திரத்தை விடாமல் நாம் உச்சரிக்க வேண்டும். அவ்வாறு ஓதப்படும் பொழுது, நம் இறைவனின் அருள் பெறுவதோடு, மனமும் சுத்தி அடையும்.
தர்ம காரியங்கள், நாம் எடுத்துப் பேசுதல் வேண்டும். சத்சங்கங்களில் கலந்துகொண்டு, இறைவனுடைய மகத்துவமான செய்திகளைக் கேட்டறிந்து வாசித்து அடுத்தவருக்கு சொல்லுவதும் வாசிகம் எனப்படும்.காயிகம் – சிவத்தலங்களிலே சென்று, நீராடுதல், அந்த நீர்நிலைகள் எங்கெங்கே இருக்கிறதோ அங்கு சென்று நாம் தீர்த்தத்தில் கங்கை, யமுனை, காவிரி போன்ற தீர்த்தத்தில் நீராடி, அங்கிருக்கும் தெய்வ சந்நிதானத்தை அடைந்து வணங்குவது சிறப்பு.
ஆனால், என்னதான் கங்கை, யமுனை, கோதாவரி என்று புனித நதி தீரத்தில் நீராடினாலும், இவை அத்தனையும் கடலில் கலந்து சங்கமும் ஆகும். ஆகவே, கடலில் நீராடுவது மிகமிக நல்லது. அவ்வாறு நாம் செய்தோம் என்றால், நமக்குப் புண்ணியம் கிடைக்கும் என்றார். கடல்நீர், உப்புநீர் என்ற ஒரு கேள்வியை எழுப்பினாள். தவறான கருத்து. சாஸ்திரத்தை நாம் பழிக்க கூடாது. கடல் நீரில் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கிவிடும். கடலில் அனைத்து விதமான ஆறுகளும் நதிகளும் புண்ணிய தீர்த்தங்களும் சங்கமம் ஆவதால், எவ்வித தோஷமும் நம்மை
அண்டாது.
நீராடுவது மிகவும் சிறப்பு என்று கூறியதும், மதுரைக்கு கடலைக் கொண்டு வர முடியுமா? என்று அவள் ஒரு கேள்வியினைக் கேட்டாள். அவர் சிரித்துக் கொண்டே… உம்முடைய மருமகனான சிவனிடம் சொல். நிச்சயமாக வழி கிடைக்கும் என்று கூறிச் சென்றார்.
மதுரையில் ஏழ்கடல் வருதல்
கௌதம முனிவர் சென்றதும், மதுரையிலே ஒரு கடல் இருந்தால் நாம் நீராடி நம்முடைய பாவத்தை போக்கி நாம் முக்தி அடையலாம் அல்லவா! என நினைத்துக் கொண்டு மகளிடம் சென்றாள்.“மகளே! நான் கடலில் நீராட விரும்புகிறேன். மதுரைக்குக் கடல் வருமா?” என்று கேட்டாள். “என்னம்மா இது வித்தியாசமாக இருக்கிறது உன்னுடைய ஆசை. கடல் இங்கு எப்படி வரும்?” என்று கேட்டதும், அந்த நேரத்தில் சுந்தரர் அங்கே தோன்றி “என்ன தாயும் மகளும் கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்களே” என்று கேட்கின்றார்.
“அம்மாவிற்கு ஒரு பெரிய ஆசை இருக்கிறது. மதுரைக்கு கடல் வர வேண்டுமாம். கடலினிலே குளித்து அவர் பாவத்தை கழிக்க வேண்டுமாம்” என்று கூறினாள். சிரித்துக்கொண்டே “மாமியார் ஆசைப்பட்டால் மருமகன் செய்வதுதானே நியாயம். நிச்சயம் செய்கின்றேன். ஆனால், மதுரைக்கு கடல் வந்தால், கடல் தண்ணீர்தான் இருக்கும். மதுரை காணாமல் போகும் பரவாயில்லையா’’ என்று எள்ளி நகையாடினார் சிவன்.“ஆஹா… அது எப்படி? மக்கள் கதி என்ன?’’ என்று கேட்டதும்,“சரி ஒரு கடல் என்ன? ஏழு கடலையும் நான் மதுரைக்கு கொண்டு வருகின்றேன்”.
“அப்படி என்றால் மக்களின் நிலை என்ன?’’ என பதறினாள் தடாதகைப் பிராட்டி. அது வந்து குவிகின்ற நேரத்திலே வடிந்து போகும் என்று சொல்லி மீனாட்சி யம்மன் தெப்பக்குளத்திலே ஏழுகடல் வண்ணங்களாக வந்து கொட்டியது. அதில் நீராடச் செல்லும் பொழுது, மறுபடியும் காஞ்சனா மாலைக்கு ஒரு சந்தேகம் வருகின்றது. எப்பொழுதுமே கடலில் நீராடுவது என்றால், கணவனுடைய கையைப் பிடித்துக் கொண்டுதான் நீராட வேண்டும் என்பது சாஸ்திரவிதி. கணவன் இல்லாதபோது, மகளின் கையைப் பற்றி கடலில் நீராட வேண்டும். அதுவும் இல்லை என்றால், கன்றின் வாலை பிடித்து நீராட வேண்டும்.
இவ்வகையில், மலையத்துவஜன் முதலிலே மரணம் அடைந்ததால், அவர் இல்லாமல் நான் எப்படி குளிக்கமுடியும்? என்று அவள் கண்ணீர் சிந்தி அழுகின்றாள்.
கை பிடித்த கணவனும் இல்லை. பெற்றெடுத்த மகளும் இல்லை. கன்றின் வாலினை பிடித்துதான் கடலில் மூழ்கி எழ வேண்டும் போலிருக்கிறது என்று கண்ணீர் சிந்தினாள்.
அப்பொழுதே சிவனான சுந்தரபாண்டியன் எதற்காக நீங்கள் அழுகிறீர்கள். இருங்கள் எனக் கூறி கைலாயத்தில் இருந்த மலையத்துவஜனை பூமிக்கு வரவழைத்தார்.
தன்னுடைய கணவனைப் பார்த்ததும் பூரிப்போடு சென்று, அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள். தன்னுடைய கணவனுடைய கையைப் பற்றி, கடலில் மூழ்கி, சிவனை நினைத்து வணங்குகின்றாள்.
சிவபெருமானும், பார்வதியும் தோன்றி, ஆசிகூற, அவர்கள் முழுகி எழுந்திருக்கும் பொழுது, சிலைகளாக மாறி, மானிடப் பிறவியை விடுத்து, கைலாயம் சென்றனர். இவ்வாறாக காஞ்சனா மாலையின் ஆசையினால், கடலே மதுரைக்கு வந்தது.
உயர்ந்த பிரபத்தியான பக்திதான்
சிறந்தது, அன்புக்கு எடுத்துக்காட்டு
என்று காஞ்சனா மாலையின் வரலாறு படிப்பவர்கள் மனதில் நிம்மதி நிச்சயம் கிடைக்கும்.
பொன்முகரியன்
The post ஏழ்கடலை அழைத்த காஞ்சனா மாலை appeared first on Dinakaran.