ஒரே இடத்தில் நலத்திட்டங்கள் கிடைக்கும்
பயன்படுத்தி கொள்ள கலெக்டர் அழைப்பு
கருர், ஜூலை 12: அரசு சேவைகள் மக்களை எளிதாக சென்றடைய ஊராட்சிதோறும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது. ஒரே இடத்தில் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். இதை பயன்படுத்தி கொள்ள கலெக்டர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார். கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி செல்லாண்டிபட்டியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் கரூர் எம்பி ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர், அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும், அவர்களை சென்று சேரும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் நகர்ப்புறங்கள் அருகில் உள்ள கிராம ஊராட்சியில் செயல்படுத்தும் வகையில் கடந்தாண்டு டிசம்பர் 18ம்தேதி அன்று துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதல்வர், தர்மபுரி மாவட்த்தில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பான திட்டம் கிராமப்பகுதிகளில் அமல்படுத்தும் வகையில் நேற்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகிறது. இதே போல், கடந்தாண்டு டிசம்பர் 18ம்தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 6ம்தேதி வர கரூர் மாநகராட்சியில் 16 இடங்களிலும், நகராட்சியில் 13 இடங்களிலு, பேரூராட்சியில் 16 இடங்களிலும், மாநகராட்சியை ஒட்டியுள்ள புறநகர்ப்பகுதியில் 5 இடங்களிலும் என மொத்தம் 50 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை வேண்டி 20,748 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 16,165 மனுக்கள் பல்வேறு துறையின் கீழ் மனுதாரர்களுக்கு நல திட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாம் கரூர் மாவட்டத்தில் 16, 18, 23, 25, 30, 1 மற்றும் 6 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசு துறைகள் ஒரே இடத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 44 வகையான சேவைகள் வழங்கப்படவுள்ளன.
இதே போன்று, மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்யும் வகையில், அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை எளிதாக பதிவு செய்யும் வகையில் சாய்வுதள வசதி, சக்கர நாற்காலிகள், குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த முகாம்களில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நடைபெறும் இந்த முகாம்கள் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார். இந்த நிகழ்வில், மாவட்ட எஸ்பி பிரபாகர், மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர் லேகா தமிழ்ச்செல்வன், துணை மேயர் சரவணன், ஒன்றியக்குழு தலைவர் சிவகாமி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
The post அரசு சேவைகள் மக்களை எளிதாக சென்றடைய ஊராட்சிதோறும் மக்களுடன் முதல்வர் முகாம் appeared first on Dinakaran.