×
Saravana Stores

சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் 7 சவரன், ₹50 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி, ஜூலை 12: வந்தவாசி அருகே சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் 7 சவரன் நகை, ₹50 ஆயிரம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். வந்தவாசி அடுத்த முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாண்டைராஜன் மகன் தரணி(26), சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது வீட்டில் இருந்தவாறு கனிணி மூலம் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தினை பராமரித்து விவசாய பணி செய்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் தனது தந்தை அப்பாண்டைராஜன், தாய் சாந்தி ஆகியோருடன் சாந்தியின் தங்கை மகள் திருமணத்திற்கு சென்னைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இவர்களது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது குறித்து அருகில் வசிப்பவர்கள் செல்போன் மூலம் தரணிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தரணி குடும்பத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, அறையில் உள்ள பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தது. அதில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகைகள், வெள்ளி குத்து விளக்குகள், 4 பட்டுப்புடவைகள், நெல் பயிர் அறுவடை செய்ய கூலி தொகை கொடுக்க வங்கியில் இருந்து கொண்டு வந்து வீட்டில் வைத்து இருந்த ₹50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தெள்ளார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியா மற்றும் போலீசார் விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். திருமணத்திற்கு சென்றதை அறிந்து திருட்டு நடந்துள்ளதால் இதில் உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டில் 7 சவரன், ₹50 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை வந்தவாசி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : 7 Sawaran ,Velabandavasi ,Vandavasi ,Sawaran ,Appandairajan ,Dharani ,Mudalur village ,Chennai ,Dinakaran ,
× RELATED கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு...