மும்பை: ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் நாடுகளுக்கு இடையே 1998 முதல் சாம்பின்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. முதலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்தப் போட்டி பிறகு 3, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாறியது. தொடர்ந்து 2017ம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகளாக போட்டி நடக்கவில்லை. இந்நிலையில் சாம்பியன் கோப்பை போட்டியை, நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் 2025ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த உள்ளது. தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்தியா இந்தப் போட்டியில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.
காரணம் கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பையில் ‘பாதுகாப்பு காரணங்களை’கூறி பங்கேற்க இந்தியா மறுத்து விட்டது. அதனால், இந்தியா விளையாட வேண்டிய ஆட்டங்கள், நாக் அவுட், பைனல் ஆட்டங்கள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. அதன்பிறகு இந்தியாவும் பங்கேற்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா இருந்தார். அதனால் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன் கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்குமா? என்ற கேள்விக்கு பிசிசிஐ இதுவரை மவுனம் சாதித்து வந்தது. எனினும் இந்தியாவின் பாதுகாப்பை கருத்தி் கொண்டு இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள லாகூரில் போட்டியை நடத்தவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் ‘சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கப் போவதில்லை’ என்று பிசிசிஐ தரப்பில் இருந்து நேற்று தகவல் வெளியாகி உள்ளது. கூடவே ‘இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை இலங்கை அல்லது அமீரகத்தில் நடத்தலாம்’ என்றும், ‘இந்தியா பைனலுக்கு முன்னேறினால், அந்த ஆட்டத்தையும் பாகிஸ்தானுக்கு பதில் வேறு நாட்டில் நடத்த வேண்டும்’ என்றும் பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்தாலும் இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ். ஆஸ்திரேலியா என பல நாடுகள் அங்கு சென்று சர்வதேச தொடர்களில் விளையாடி வருகின்றன. மேலும் கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் வந்து விளையாடியது. ஆனால் பாகிஸ்தான் சென்று விளையாட ‘பாதுகாப்பு காரணங்களுக்காக’ இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. கிரிக்கெட் உலகில் இந்தியா செல்வாக்கு பெற்ற நாடாக இருப்பதால் ‘ஐசிசி’ இந்த முறை என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
The post ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தான் போக மாட்டோம்; பிசிசிஐ தரப்பு தகவல் appeared first on Dinakaran.