சென்னை, ஜூலை 11: சென்னை தி.நகரில் உள்ள சண்முகா ஸ்டோர்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 43 கடைகள் ரூ.1.5 கோடி பாக்கி வைத்துள்ளதால் சென்னை மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
சென்னை மாநகராட்சியில் வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள், நிறுவனங்களுக்கு வருடத்துக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் இருக்கிறார்கள். இந்த சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரையாண்டுக்கு சுமார் ரூ.850 கோடி என்ற அளவில் ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில், குறிப்பிட்ட நாளுக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும். சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக 1 சதவீதம் தனி வட்டியுடன் சொத்து வரி செலுத்த வேண்டும். அதேபோல, சொத்து வரி மற்றும் தொழில் வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். குறிப்பாக, சென்னை தி.நகர் டாக்டர் நாயர் தெருவில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள மொத்தம் 38 கடைகள் 90 லட்சம் பாக்கி வைத்துள்ளன. அதேபோல், ரங்கநாதன் தெருவில் உள்ள சண்முகா ஸ்டோர்ஸ் ரூ.30.59 லட்சம் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் சரவணா ஸ்டோர்ஸ் ரூ.48 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 43 கடைகளில் இருந்து 1.5 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்தப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
The post ₹1.5 கோடி சொத்து வரி பாக்கி தி.நகரில் 43 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.