- திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம்
- சேயார்
- திருவண்ணாமலை
- Seiyaru
- திருவண்ணாமலை மாவட்டம்
- செய்யாறு தாலுக்கா நெடுங்கல் கிராமம்
திருவண்ணாமலை, ஜூலை 11: செய்யாறு அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் சதீஷ் (30), கூலி தொழிலாளி. இவர், கடந்த 4.4.2017 அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை தனது வீட்டுக்கு மிரட்டி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். தெருவில் விளையாடச் சென்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் தேடி உள்ளனர். அப்போது, சதீஷ் வீட்டுக்குள் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. எனவே, வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, சிறுமியிடம் சதீஷ் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்த கொடூரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, சதீஷ் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், செய்யாறு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சதீஷ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில், அரசு தரப்பில் சிறப்பு பொது வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதில், 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் சதீஷ்க்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தண்டனை விதித்தார். மேலும் ₹11 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வாலிபர் சதீைஷ போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post வாலிபருக்கு வாழ்நாள் சிறை தண்டனை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு செய்யாறு அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை appeared first on Dinakaran.