×
Saravana Stores

போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான வாலிபர் கைது மகளிர் போலீசார் நடவடிக்கை வந்தவாசி அருகே சிறுமியிடம் சில்மிஷம்

வந்தவாசி, ஜூலை 11: வந்தவாசி அருகே போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவாக இருந்த வாலிபரை மகளிர் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தைச்சேர்ந்தவர் அப்பு மகன் பெருமாள்(29), கூலி தொழிலாளி இவர் கடந்த 2019ம் ஆண்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 7வது படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக வந்தவாசி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இந்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பெருமாளுக்கு திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் பெருமாள் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்தார். இதுகுறித்து நீதிபதி பார்த்தசாரதி பிடிவாரன்ட் பிறப்பித்து இருந்தார். இந்நிலையில் நேற்று கீழ்வில்லிவலம் கிராமத்திற்கு பெருமாள் வந்ததாக மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற பெருமாளை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பார்த்தசாரதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான வாலிபர் கைது மகளிர் போலீசார் நடவடிக்கை வந்தவாசி அருகே சிறுமியிடம் சில்மிஷம் appeared first on Dinakaran.

Tags : POCSO ,Vandavasi ,Appu Makan Perumal ,Kilyvilivalam ,Vandavasi, Tiruvannamalai district ,Chilmisham ,
× RELATED பள்ளி மாணவிக்கு காதல் டார்ச்சர் வாலிபர் போக்சோவில் கைது