கள்ளக்குறிச்சி, ஜூலை 11: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் மேலும் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராய குடித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 229 பேர் கடந்த 19ம்தேதி கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 65 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சையில் குணமடைந்து ஜூலை 1ம்தேதி வரை 157 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பினர். இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 4 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 7 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அதில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி அடுத்த செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சிவராமன்(41) என்பவர் தற்போது ரோடுமாமாந்தூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்தார். அதனையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி appeared first on Dinakaran.