×
Saravana Stores

சிறுநீரக புற்றுநோய்… வருமுன் காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

நவீனங்கள் அதிகரிக்க அதிகரிக்க, ஒருபுறம் நோய்களும் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் எங்கோ ஒருவருக்கு புற்றுநோய் பற்றி கேள்விப்படுவோம். ஆனால், இன்றைய வாழ்க்கைமுறை மாற்றத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய்களில் பல வகைகள் உண்டு. அந்தவகையில் சிறுநீரக புற்றுநோயும் ஒன்று. இந்த புற்றுநோய், பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 20 ஆம் தேதி அன்று சிறுநீரக புற்றுநோய்க்கான தினமாக அனுசரிக்கப்படுகிறது. சிறுநீரக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது அதன் சிகிச்சை முறைகள் என்னவென்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் எஸ். ராஜசுந்தரம்.

சிறுநீரக புற்றுநோய் என்பது என்ன… எதனால் வருகிறது..மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று சிறுநீரகங்கள். பொதுவாக ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். இது இரத்த ஓட்டத்தில் இருந்து கழிவுகளை அகற்றி சிறுநீராக அனுப்புவதன் மூலம் ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. சிறுநீரக புற்றுநோய் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் அரிதான புற்றுநோயாகும். பொதுவாக ரத்த புற்று, வாய்ப்புற்று, வயிற்றுப்புற்றுநோய் போன்றவைகளே அதிகம் காணப்படும்.

அதிலிருந்து சிறுநீரக புற்றுநோய் மிகவும் அரிதானது. இது உலகளவில் புற்றுநோய் வரிசைகளில் 20- ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், சமீபகாலமாக சிறுநீரகப் புற்றுநோயும் அதிகரித்து வருகிறது. தற்போதைய ஆய்வுப்படி ஆண்டுக்கு சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், இதில் குறைந்தபட்சம் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணத்தை தழுவுகின்றனர். ஏனென்றால், சிறுநீரகப் புற்றுநோயைப் பொருத்தவரை பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே இது கண்டறியப்படுவதால் இந்தநிலை ஏற்படுகிறது.

சிறுநீரகப் புற்றுநோய் ஏற்பட காரணம் என்னவென்றால், புகைப்பிடிப்பது, மதுஅருந்துவது, உயர்ரத்தஅழுத்தம், உடற்பருமன் போன்றவற்றால் பெரும்பாலும் ஏற்படுகிறது. மற்றபடி இது பரம்பரை நோய் அல்ல. சிறுநீரகப் புற்றுநோயைப் பொருத்தவரை, பெண்களைவிட ஆண்களுக்கே அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக, இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றில்தான் புற்று பாதிப்பை ஏற்படுத்தும். மிகவும் அரிதாக இரண்டு சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்படலாம். அல்லது முற்றிய நிலையில் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்படலாம்.

பொதுவாக சிறுநீரக புற்றுநோயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று சிறுநீரகத்தில் மூன்று போல் இருக்கிறது. அப்பர் போல், மிடில் போல், லோயர் போல் என்று. அதில், ஏதாவது ஒரு போலில்தான் பெரும்பாலும் புற்று ஏற்படும். இரண்டாவது, சிறுநீரக டியூமர் என்று சொல்லுவோம். அதாவது சிறுநீரகத்தில் கட்டியாக உருவாகி பின்னர் புற்று
நோயாக பாதிப்பை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

சிறுநீரகப் புற்றுநோயைப் பொருத்தவரை, ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறியும் தெரிவதில்லை. நோய் முற்றிய நிலையிலேயே பலருக்கும் இந்நோய் இருப்பது தெரிய வருகிறது. இதுவும் மரணம் ஏற்பட ஒரு காரணமாகிறது. இருப்பினும், கட்டி பெரிதாக வளரும்போது சில பொதுவான அறிகுறிகளை காட்டுகிறது.பொதுவான அறிகுறி என்றால் சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் கலந்து வருவதுதான் இதற்கான முதல் அறிகுறி. மற்றபடி ஆரம்பகட்டத்தில் வலியோ, வேறு அறிகுறிகளோ எதுவும் தெரியாது. கட்டி சற்று வளர்ந்த நிலையில், முதுகில் தொடர்ந்து வலி, குறிப்பாக விலா எலும்புகளுக்கு கீழே வலி காணப்படுவது.அடிவயிற்றில் வீக்கம் காரணமாக வயிற்று வலி ஏற்படுவது.

சோர்வு உணர்வு

திடீர் எடை இழப்பு

பசியின்மை

கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை ஏற்படும்.

சிகிச்சை முறைகள்

சிறுநீரக புற்று நோய்க்கான சிகிச்சை முறை என்று எடுத்துக் கொண்டால், தற்போது, நவீன சிகிச்சை முறைகள் நிறையவே வந்துவிட்டன. அவை, லேப்ராஸ்கோப்பி சிகிச்சை, ரோபாடிக் சிகிச்சை, இம்னோ தெரபி, அறுவைசிகிச்சை என பல முறைகள் உண்டு. அதில் புற்று எந்த நிலையில் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தவாறு சிகிச்சையை மேற்கொள்ளுவோம்.
இந்த புற்றுநோயை பொருத்தவரை, மற்ற புற்றுநோயை கண்டறிய பயாப்ஸி செய்வது போல் செய்வதில்லை. ஏனென்றால், சிறுநீரகத்தில் கட்டி ஏற்பட்டாலே, அது பெரும்பாலும் புற்றாகத்தான் இருக்கும். எனவே, புற்று எந்தநிலையில் இருக்கிறது என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து பின்னர் தேவையான சிகிச்சையை செய்வோம்.

இந்த புற்றுநோயைப் பொருத்தவரை, புற்று இருப்பது உறுதியானால், ஆரம்ப காலங்களில் அறுவைசிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. எந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அதை அறுவைசிகிச்சை மூலம் நீக்கி விடுவோம். ஆனால், தற்போது அப்படி நீக்குவதில்லை. லேப்ரோஸ்கோபி அல்லது ரோபாடிக் சிகிச்சை மூலம் எந்த இடத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடத்தை மட்டுமே நீக்குகிறோம். அப்படி நீக்க முடியாத அளவு புற்று முற்றியிருந்தால் மட்டுமே அறுவைசிகிச்சை மேற்கொள்கிறோம். அதிலும் தற்போது இம்னோ தெரபி வந்தபிறகு, மிகவும் நல்ல பலனை தருகிறது. ஒருவேளை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், இம்னோ தெரபி மூலமே குணப்படுத்திவிடலாம். நான்காம் நிலையில் இருந்தாலும் இந்த இம்னோ தெரபி சிகிச்சை நல்ல பலன் தருகிறது.

சிறுநீரக புற்றுநோயைப் பொருத்தவரை, இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதால், ஒரு சிறுநீரகத்தில் புற்று ஏற்பட்டு நீக்கி விட்டாலும் இன்னொரு சிறுநீரகம் செயல்படுவதால், பெரும்பாலும் உயிருக்கு பாதிப்பு ஏற்படாது. ஒருவேளை இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் இருந்தால் மட்டுமே உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதில் ஆரம்பநிலையில் இருந்து மூன்று நிலைகள் வரைகூட முழுமையாக குணப்படுத்திவிட முடியும். சிலருக்கு நான்காம் ஸ்டேஜுக்கு போன பிறகும் காப்பாற்றியுள்ளோம். அதனால், சிறுநீரக புற்றுநோயை பொருத்தவரை பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஆரம்ப நிலையில் கண்டறிவது ஒன்று மட்டும்தான் நாம் செய்ய வேண்டியது.

தற்காத்துக் கொள்ளும் வழிகள்

கடந்த ஐந்து – பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை மாஸ்டர் ஹெல்த் செக்கப் அவ்வளவாக பிரபலம் இல்லாத நேரம். அதனால், பலரும் சிறுநீரக புற்றுநோய் முற்றிய நிலையில் அறிகுறி தென்பட்ட பிறகே மருத்துவரை நாடி வருவார்கள். ஆனால், தற்போது அப்படியில்லை பலரிடம் ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான புற்றுநோய்கள் ஆரம்பநிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறது.

எனவே ஒவ்வொருவரும் நாற்பது வயதை அடைந்துவிட்டாலே, ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது மிகவும் நல்லது. இதன் மூலம் சிறுநீரகப் புற்று என்று இல்லாமல், வேறு நோய் தாக்குதல் இருந்தாலும், ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்பது மிகவும் முக்கியமானது.

மற்றபடி தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்றால், புகைப் பிடிப்பதை நிறுத்த வேண்டும், மது அருந்தக் கூடாது, உடல்எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான சமச்சீர் உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post சிறுநீரக புற்றுநோய்… வருமுன் காப்போம்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!