×
Saravana Stores

நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என கூறும் பாஜ கூட்டணியில் போட்டியிடும் பாமகவை நிராகரிக்க வேண்டும்: விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

விழுப்புரம்: நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என கூறும் பாஜவுடன் கூட்டணியிட்டு போட்டியிடும் பாமகவை இடைத்தேர்தலில் பொதுமக்கள் நிராகரிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திமுக இளைஞரணி அமைப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று 2வது நாளாக இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். தும்பூர், நேமூர் உள்ளிட்ட பகுதியில் அவர் பேசியதாவது: கடந்த மக்களவை தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் வெற்றியை தந்த உங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாசிச பாஜவையும், அடிமை அதிமுகவையும் விரட்டியடிக்க முதலமைச்சரும், நானும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டோம். பிரதமர் மோடி 7, 8 முறை தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வந்தார்.

ஆயிரம் முறை வந்தாலும் இங்கு காலூன்ற முடியாது என்பதை நீங்கள் தேர்தல் மூலம் நிரூபித்து காட்டி விட்டீர்கள். விழுப்புரம் மக்களவை தொகுதியில் விசிக வேட்பாளரை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். அதேபோல் நாளை(10ம் தேதி) நடைபெறும் வாக்குப்பதிவின் போது உதயசூரியன் சின்னத்தில் வாக்ளித்து 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை. இதற்கு காரணம் மக்கள் திமுகவுக்கு தொடர் வெற்றியையும், அதிமுகவுக்கு தோல்வியையும் அளித்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமிக்கு மக்களை பார்த்தாலே பயம். அதனால்தான் அதிமுக போட்டியிடவில்லை. மக்களை பார்த்துமட்டுமல்ல, எதிர்த்து போட்டியிடும் பாஜவை பார்த்தும் பயம். அதனால்தான் அவர்கள் கூட்டணிக்கு வழிவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். நீட் தேர்வை எதிர்த்து இன்று வடமாநிலத்திலும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே நீட் தேர்வை ரத்து செய்ய குரல் கொடுத்தவர் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்காக இன்னும் சட்டப்போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார். ஆனால் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்று கூறும் பாஜவுடன் கூட்டணியில் போட்டியிடும் பாமகவை இடைத்தேர்தலில் பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என கூறும் பாஜ கூட்டணியில் போட்டியிடும் பாமகவை நிராகரிக்க வேண்டும்: விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : BJP ,BJP alliance ,Minister ,Udayanidhi Stalin ,Vikravandi ,Villupuram ,Udhayanidhi Stalin ,BAM ,Villupuram District ,DMK ,Annieyur Siva ,
× RELATED அத்வாலே கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட...