×
Saravana Stores

உன்னத உறவுகள்-நெருக்கம் காட்டும் உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

நாம் பல பொது இடங்களுக்கும் செல்கிறோம். அங்கங்கே தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என சிலரை வழியில் பார்க்க நேரிடுகிறது. அவர்களைப் பார்த்து, முதலில் கேட்பது ‘எப்படியிருக்கீங்க, வீட்டில் எல்லோரும் நலமா?’ என்பதுதான். அதன் பிறகுதான் மற்றவர்களைப் பற்றி பேசுவோம். நம் கலாச்சாரத்தில் பிறர் நலனில் அக்கறை காட்டுவதில் ஆரம்பித்து அனைவரையும் உறவுகளாகவே பாவிக்கும் பண்பை நமக்குள் உருவாக்கியுள்ளது.

உறவுகளை அவரவர் குடும்பப்படி அழைக்கும் விதம் வேண்டுமானால் மாறலாம். ஆனால் உறவுகள் முறை கண்டிப்பாக மாறாது. உதாரணமாக, ‘பாட்டி’ என்று அழைப்பதை சில குடும்பங்களில் ‘அம்மம்மா’ என்று கூறுவதுண்டு. அம்மாவின் அம்மா என்பதால் கூட அப்படி அழைக்கலாம். மாமா பெண்ணை ‘அம்மங்கா’ என்றும், பையனை ‘அம்மாஞ்சி’ என்றும் கூட அழைத்து வந்தார்கள். காலப்போக்கில் அனைவரையும் அண்ணா-தம்பி, அக்கா-தங்கை என்று பொதுவாக அழைக்க ஆரம்பித்தனர்.

இன்றளவும் சிலர் மாமன்-மச்சான் என்றெல்லாம் கூப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவரவர் வயதுக்கேற்றபடி கூட உறவு முறைகள் சொல்லி அழைக்கப்படுகின்றனர். அலுவலகத்தில் கூட மேலாளர் முதல் பணிபுரியும் அனைவருக்குமே சார், மேடம் என்று அழைக்காமல் பெரியவரோ சிறியவரோ பெயரால் மட்டுமே அறியப்படுகிறார்கள். பொதுவாக திருமணங்களில் மாலை மாற்றும் வைபவம் ஒன்று உள்ளது. மாப்பிள்ளை-பெண் இவர்களின் தாய் மாமாக்கள் அருகிலிருந்து மாலை மாற்றுவதும், தோள் தூக்குவதும் பழக்கம். இது போன்ற சில உறவுகளில் பாசமும் பந்தமும் வெளிப்படையாகவே நமக்குத் தெரியவரும்.

சில உறவுகள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சந்தர்ப்பங்கள் நேரும் பொழுது அவர்களின் பாசத்தினை நம் மீது பொழிவார்கள். அதற்காக ஒட்டு மொத்த உறவுகளையும் ஒதுக்கி வைத்திட முடியாது. “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்பார்கள். சாலையில் பார்ப்பவர்கள் மீது எல்லாம் பாசம் வந்து விடாது. அதனால்தான் என்றுமே ரத்த பந்த உறவுகள் விட்டுப்போகாது என்பார்கள். அனைவருமே பாசத்தைக் காட்டிவிட்டால், சில தீய எண்ணம் கொண்டவரை நம்மால் அடையாளம் காணமுடியாது.

அதனால்தான் ஒவ்வொன்றிலும் நல்லது-கெட்டது என உள்ளது. நாம் நல்ல எண்ணங்களோடு, நல்லதை நினைத்து செயல்பட்டால் போதும். பார்ப்பவர் கண்ணோட்டத்தைப் பொறுத்து எண்ணங்கள் புரிந்து கொள்ளப்படும். அளவில்லா அன்பு நம்மிடம் இருக்கிறது. கொடுத்துக் கொண்டேயிருப்போம். அதை சரிவர எடுத்துக்கொள்வதும், புறம் பேசுவதும் அவரவர் மனநிலையை
பொறுத்ததாகும்.

‘அம்மங்கா’ என்ற உறவுமுறைப் பெயர் வேண்டுமானால் பாசம் தெரியாமல், ஏதோ ஒன்றுவிட்ட- இரண்டுவிட்ட உறவு போன்று தோன்றலாம். ஆனால் அந்த உறவில் அத்தனை பாசமும், பந்தமும் அமைந்துள்ளது. ஒவ்வொரு உறவும் ஏதாவது ஒருவிதத்தில், தனித்தன்மையுடன் முக்கியத்துவமும் கொண்டதாகத்தான் இருக்கிறது. ஒரே மாதிரி வயது கொண்ட அத்தை பிள்ளைகள், மாமா பிள்ளைகள் போன்றோர் சில சமயங்களில் நண்பர்களாகக்கூட பழகுவதுண்டு. இருப்பினும் குறைகூறும் உறவுகள் சில எங்கெங்கோ இருக்கத்தான் செய்யும். அவர்களிடம் இடைவெளி விட்டு பழகும்போதே நமக்கும் சரி அவர்களுக்கும் சரி அந்த உறவில் இடையே உள்ள பந்தம் என்ன என்று புரிந்துகொள்ள முடியும்.

தூரத்து உறவினர் ஒருவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி வெளிநாட்டில் குடியேறி அங்கேயே குடியுரிமை பெற்றிருப்பார். அவர் அங்கு சென்ற சில காலம் வரைதான் தங்களின் உறவினர்களுடன் அவ்வப்பொழுது தொடர்பில் இருப்பார். சில காலத்திற்குப் பிறகு தொடர்பே இல்லாமல் காணாமல் போய் விடுவார். அங்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு உதவவும் ஆளில்லாமல் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்வார். அந்த சமயத்தில்தான் அவர்களுக்கு உறவுகள் என்றால் என்ன என்ற புரிதல் ஏற்படும்.

யாருமே இல்லாத அண்டை நாட்டில் பண வசதியுடன் வாழ்வதைவிட நம் சொந்த ஊரில் சொந்த பந்தங்களுடன் வாழ்வதுதான் சந்தோஷம் என்பதை பகிர்ந்து கொள்வார். அதனால் அந்நிய நாடு வேண்டாம் என்று துறந்து தன் சொந்த மண்ணிற்கே திரும்புபவர்களும் பலர் உள்ளனர். காரணம், இங்கு எந்தப் பிரச்னை வந்தாலும் உதவ உறவுகள் வருவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். பல ஆண்டுகள் விடுபட்ட உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொண்டனர். இவ்வளவு ஆண்டுகள் தொடர்பில் இல்லாவிட்டாலும், பழைய உறவுகள் மறைந்த பிறகும், அவர்களின் வாரிசுகள் உதவ முன்வருவார்கள். அனைத்து காரியங்களையும் உறவினர்களே முன்நின்று நடத்துவார்கள். இதுதானே ‘உன்னத உறவுகள்’ என்பது.

The post உன்னத உறவுகள்-நெருக்கம் காட்டும் உறவுகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சிறுகதை-வெற்றுக் காகிதம்!