×

பெங்களூரு-மைசூரு மற்றும் பெங்களூரு-தும்கூரு இடையில் நான்கு வழி ரயில்பாதை அமைக்க திட்டம்

பெங்களூரு: பெங்களூரு-மைசூரு-தும்கூரு மாநகரங்களை இணைக்கும் வகையில் நான்கு வழி ரயில் பாதை திட்டம் அமைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் பெங்களூருக்கு அடுத்தப்படியாக மைசூரு மற்றும் தும்கூரு மாநகரங்கள் உள்ளது. இரு மாநகரங்களிலும் தற்போது பெரிய பெரிய தொழிற்பேட்டைகள் உருவாகி வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சார்பில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மாநில அரசு நடத்திய சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் புதுப்புது தொழிற்சாலைகள் உருவாகி வருகிறது. இந்த கால கட்டத்தில் மேற்கண்ட மாநகரங்கள் இடையில் ரயில் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை கருத்தில் கொண்டுள்ள தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் பெங்களூரு-மைசூரு மற்றும் பெங்களூரு-தும்கூரு இடையில் தற்போது இருவழி ரயில் பாதை இருப்பதை நான்கு வழி ரயில் பாதையாக தரம் உயர்த்த முடிவு செய்ததுள்ளதுடன் அதற்கான திட்ட வரைவு தயார் செய்துள்ளது.

அந்த திட்ட வரையில் ரயில் பாதை அமைக்க ஏற்படும் செலவு மதிப்பீடு, நிலம் கையப்படுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கான அம்சங்களும் சேர்க்கப்பட்டு, இந்திய ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வழி தடம் அமைக்கப்பட்டால், சரக்கு ரயில் சேவை மட்டுமில்லாமல், கூடுதலாக வந்தேபாரத் ரயில் சேவை தொடங்கவும் வாய்ப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் தயாரித்து ரயில்வே வாரியத்திற்கு அனுப்பியுள்ள திட்ட வரைவுக்கு வாரியம் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் இதற்கு அனுமதி வழங்கும் வகையில் வரும் ஜூலை 22ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் நடப்பு 2024-25 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு-மைசூரு இடையில் 137 கி.மீட்டரும், பெங்களூரு-தும்கூரு இடையில் 70 கி.மீட்டரும் என 207 கி.மீட்டர் தூரம் நான்கு வழி ரயில் பாதை திட்டம் செயல்படுத்தினால் வடகர்நாடக பகுதி மற்றும் தென்கர்நாடக பகுதியில் வளர்ச்சி பெற வாய்ப்பாக அமையும் என்பது தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது.

The post பெங்களூரு-மைசூரு மற்றும் பெங்களூரு-தும்கூரு இடையில் நான்கு வழி ரயில்பாதை அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Bengaluru-Mysore ,Bengaluru-Tumkur ,BENGALURU ,Railway Board ,Bengaluru-Mysore-Tumkur ,Mysuru ,Tumkur ,Bangalore ,Dinakaran ,
× RELATED சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகள்