×
Saravana Stores

புகார்களுக்கு விரைவில் தீர்வுகாண ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்ப்பு மையம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

பயணிகள் புகார்களுக்கு விரைவில் தீர்வுக்கான ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் தீர்க்கும் உதவி மையம் விரைவில் அமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், சேலம், கோவை, கும்பக்கோணம், நெல்லை, மதுரை போக்குவரத்து கழகங்கள் என 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதில் மாநகர போக்குவரத்து கழகம் சென்னை மாநகரில் மட்டும் பேருந்துகளை இயக்குகிறது, மற்ற போக்குவரத்து கழகங்கள் அந்தந்த மண்டலங்களிலும் வெளியூர்களுக்கும் பேருந்துகளை இயக்குகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் நீண்ட தூர பயணத்திற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், வர்த்தக இடங்கள், வழிபாட்டு மற்றும் சுற்றுலா தலங்களுக்கும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்கி வருகிறது.

அனைத்து போக்குவரத்து கழகங்களையும் சேர்த்து மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் நாளொன்றுக்கு சராசரியாக 18,500 பேருந்துகள் வரை இயக்கப்படுகிறது, தினமும் 1.7 கோடி பேர் பயணிக்கின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு அவ்வப்போது குறைகளும் ஏற்படுகின்றன. இது குறித்து பயணிகள் புகாரளிக்க கடந்த ஆண்டு 18005991500 மற்றும் 149 ஆகிய இரண்டு சேவை எண்கள் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை புகார்களை பணியாளர் கேட்டறிந்த கைகளால் பதிவு செய்து வந்தனர்.

இந்த நடைமுறையால் உயரதிகளுக்கு புகார்களின் நிலை குறித்து அறிய முடியாமல் இருந்தது. தற்போது உள்ள உதவி எண்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 800 புகார்கள் வரை பெறப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் எளிதாக புகார் அளிக்கவும், புகார்களுக்கு விரைவாக தீர்வுக்கானவும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் தீர்க்கும் உதவி மையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. இந்த மையமானது பயணிகளின் குறைகள் மற்றும் புகார்களை வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் நிவர்த்தி செய்து வைக்கும். மேலும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகளை தொடர்ந்து கண்காணிக்கும்.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைத்தீர்ப்பு மையம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பல்லவன் போக்குவரத்து ஆலோசனை சேவைகள் நிறுவனம் கால் சென்டர் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களிடம் இருந்து அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் தீர்க்கும் உதவி மையம் அமைக்கவும், செயல்படுத்தவும் பரிந்துரைகளை அழைத்துள்ளது.

இந்த ஒருங்கிணைந்த குறைத்தீர் மையத்திர்காக ஒரு அழைப்பு மையம் மாநகர் போக்குவரத்து கழக தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட உள்ளது. தொலைபேசி, மின்னஞ்சல், வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பெறப்படும் மக்களின் குறைகளை ஆன்லைன் மூலம் அந்தந்த போக்குவரத்துக் கழகத்திற்குத் இந்த இடத்தில் இருந்து தெரிவிக்கப்படும். புகார் தொடர்பான வாட்ஸ்அப் அழைப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவதற்கு கைபேசி எண் வழங்கப்படும்.

இந்த உதவி மையத்திற்கான மென்பொருளின் மேம்பாடு, தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பது, செயல்படுத்துவது, பராமரிப்பது, கிளவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் உதவி மையத்திற்கு பணியாளர்கள் வழங்குவது ஆகியவற்றை மேற்பார்வையிட ஒரு நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டமைப்பில் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்ய இந்த நடவடிக்கை பயனுள்ளதாக அமையும்.

பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரின் செயல்பாடுகள், படிக்கட்டில் ஆபத்தான பயணம், பேருந்துகளின் தரத்தை உறுதி செய்வது, குறிப்பிட்ட வழித்தடங்களில் போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குவது, பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்வது, பேருந்துகள் நிற்கும் இடங்களில் உணவு பொருட்கள் போதிய தரத்துடன் இல்லாமல் இருப்பது, டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற முடியாமல் இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. இவற்றுக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகாரிகள் தீர்க்கும் உதவி மையம் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

* ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெறப்பட்ட புகார்கள்
மாதம் உதவி எண்கள் மூலம் பெறப்பட்ட புகார்கள்
ஜனவரி 32,224
பிப்ரவரி 22,179
மார்ச் 19,699
ஏப்ரல் 23,518
மே 20,939
ஜூன் 22,686
ஜூலை 22,221
ஆகஸ்ட் 24,888

 

The post புகார்களுக்கு விரைவில் தீர்வுகாண ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்ப்பு மையம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Integrated Passenger Discharge Center ,Department of Transport ,Integrated Passenger Grievances and Complaints Resolution Assistance Center ,Tamil Nadu ,Government Rapid Transport Corporation ,Municipal Transport Corporation ,Viluppuram ,Salem, Goa ,Integrated Passenger Redressal Centre ,Information for Transport Department ,Dinakaran ,
× RELATED அதிகப்படியான கார்பன் உமிழ்வால்...