×
Saravana Stores

புனரமைப்பு பணியால் புத்துயிர் பெற்றது கனமழையால் 59 குளங்கள் நிரம்பின: நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி

இந்திய மெட்ரோ நகரங்களில் ஒன்றாக தமிழகத்தின் தலைநகரம் சென்னை உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 1400 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடிய நகரமாகும். அதாவது லண்டன் நகரத்தை விட 2 மடங்கு அதிக அளவு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை விட 4 மடங்கு அதிக அளவுக்கு மழை பெய்யக்கூடிய நகரம் தான் சென்னை. அப்படியிருந்தும், சென்னையில் 2014ம் ஆண்டில் குடிநீர்ப் பற்றாக்குறை வழக்கத்தைவிடவும் அதிகம் ஏற்பட்டது. பின்னர் 2015ல் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நீர்மட்டத்தின் அளவு சற்று உயர்ந்து காணப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக சென்னையில் குடிநீர்ப் பற்றாக்குறை மிக மோசமான நிலையில் நிலவி வந்தது. அப்போது, நிலவிய கடும் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிப்புக்குள்ளானது. அரசு சார்பில் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாகக் குடிநீர் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இப்படி, ஒவ்வோர் ஆண்டும் சென்னை மாநகரம் அனுபவித்துக் கொண்டிருந்த சூழலியல் சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இதற்கெல்லாம் காரணம், மழை வெள்ள காலங்களில் கிடைக்கும் மழைநீரை துளி அளவும் சேகரிக்காமல் வீணாக்குவது தான் இதுபோன்ற குடிநீர் பஞ்சத்துக்கு காரணமாக அமைகிறது. மழைநீரை சேகரித்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும். அப்படி உயர்ந்தால் தான் தண்ணீர் பஞ்சம் இல்லாத சென்னையை உருவாக்க முடியும். இதை எல்லாம் உயர்ந்து இருக்கின்ற குளங்கள், ஏரிகள், நீர்நிலைகளை தூர்வாரி அவற்றை ஆழப்படுத்தினால் மட்டுமே மழைநீரை சேகரிக்க முடியும்.

இதுபோன்ற எந்த செயல் திட்டங்களை வகுக்காததால் தான் கடந்த 2019ம் ஆண்டில் சென்னை நகரத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதை கருத்தில் கொண்டு அப்போதைய அதிமுக அரசு மீது எந்த வித மழைநீர் சேகரிப்பு திட்டங்களை எதுவும் செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டியதாக அப்போதைய எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பெய்த வடகிழக்கு பருவமழையானது தொடர்ந்து தேவையான அளவு மழையை கொடுத்து வருவதால் தற்போது வரை சென்னையில் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.

அதற்கு காரணம், தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த மார்ச் மாதம் சென்னை குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வின் படி, சென்னையில் தற்போது நிலத்தடி நீர் 4.22 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து நீர்மட்டம் 0.26 மீட்டர் உயர்ந்துள்ளது. அதாவது ஓரளவு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அண்ணாநகர், ஆலந்தூர் போன்ற மண்டலங்களில் கடந்த ஓராண்டாக ஒரு மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

மணலி, மாதவரம், அம்பத்தூர் போன்ற இணைக்கப்பட்ட பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட பகுதிகளில் நீர்மட்டம் கிட்டத்தட்ட 0.20 மீட்டர் குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த மண்டலங்களுடன் சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட மாதவரம் அம்பத்தூர் மணலி உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள திரு.வி.க. நகர் பகுதியில் 1.74 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

மேலும் இந்த மண்டலத்தில் உள்ள தேனாம்பேட்டை இராயபுரம் மற்றும் அடையார் பகுதிகளில் ஓரளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளில் மிக அதிக அளவு நிலத்தில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதாவது இங்கு 3 மீட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பிறகு சென்னையில் ஜனவரி மாதத்தில் 3.46 மீட்டர் ஆழத்தில் இருக்கும். அது கடந்த பிப்ரவரி மாதத்தில் 4.22 மீட்டர் ஆழத்தில் இருந்தது என தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை தொடர்ந்து உயர்த்தும் வகையில் பல்வேறு அதிரடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தி அதில் மழைநீரை சேகரித்து வைக்கும் திட்டத்தை தமிழக அரசு தற்போது கையில் எடுத்துள்ளது. அதற்கு, தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் நல்ல பலன் கிடைத்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 59 குளங்கள் நிரம்பி உள்ளதாக மாநகராட்சி நிர்வாம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மழைநீரை சேகரிக்கின்ற வகையிலும் நீர்நிலைகளை மேம்படுத்தும் வகையிலும் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் குளங்கள் மற்றும் நீர்நிலைகளை புனரமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது பெய்த கனமழையின் காரணமாக 59 குளங்கள் அதன் முழு நீர்தேக்கும் திறனை அடைந்து, நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இதில். திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட தாமரைக்குளம், மண்டலத்திற்குட்பட்ட எலந்தனுர் குளம், பர்மா நகர் குளம் ஆண்டார்குப்பம் கிராமக் குளம். ஆண்டார்குப்பம் மயானபூமிகுளம் குளக்கரை குளம் கன்னியம்மன்பேட்டை குளம். காமராஜபுரம் குளம், வடபெரும்பாக்கம் குளம், விநாயகபுரம் மயானபூமி குளம், வடபெரும்பாக்கம் சாமுவேல் நகர் மயானபூமி குளம்,

கதகுளி மயானபூமி குளம், கொசப்பூர் ஸ்ரீ வேம்புலியம்மன் கோயில் குளம், கொசப்பூர் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் குளம், தீயம்பாக்கம் குளம், தீயம்பாக்கம் காந்திநகர் குளம், சின்னத் தோப்பு குளம், செட்டிமேடு குளம், ஓலக்குளம், மூலகண்டமாரியம்மன் கோயில் தெரு குளம் ராமலிங்கபுரம் தேவராஜ் தெரு குளம், மாசிலாமணி நகர் குளம், ராமலிங்கசாமி கோயில் குளம் ஆகியவை நிரம்பி உள்ளன.

மேலும், மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட தாமரைக்குளம், பேசின் ஏரி முள்ள குளம், செல்லக் குளம், இதயன் குளம், அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட வைரக்குளம், சிவாவிஷ்ணு குளம், கொரட்டூர் தாங்கல் குளம், மீனாம்பேடு தாங்கல் குளம், கங்கையம்மன் குளம் ஆகியவை நிரம்பி உள்ளன. அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பரசுராமர் கோயில் குளம், காசி விஸ்வநாதர் கோயில் குளம் ஆகியவையும் நிரம்பி உள்ளன. தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட அகத்தீஸ்வரர் கோயில் குளம், கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பாஸ்கர் காலனி குளம் நிரம்பி உள்ளது.

அடையாறு மண்டலத்திற்குட்பட்ட மருதீஸ்வரர் கோயில் குளம், பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ஊத்துக் குளம் வண்ணான் குளம், ஜல்லடியான்பேட்டை குணம், சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வண்ணகேணி மற்றும் தட்சன் கேணி குளம் அலிலாதீஸ்வரர் கோயில் குளம், புறா குளம், புல்லா கேணி, அனுமன் காலனி தான்தோன்றியம்மன் கோயில் குளம், நாட்டுப் பன்னை குளம் சோலிமா கார்டன் குளம், பெடரியம்மன் கோயில் குளம் வல்வேட்டி தூங்கல் ஏரி தெற்கு எல்லை பேட்டைருளம், சாராயக் குளம், ரெட்டைக் குட்டை தாங்கல் குளம் ராமன் தாங்கல் எரி புதுச்சேரி குளம் கங்கையம்மன் கோயில் குளம் கனகன்மேனியா குளம் பெரிய கேணி குளம் உள்ளிட்ட 59 குளங்களில் மழைநீர் நிறைந்து காணப்படுகிறது.

இதனால், சுற்று வட்டார பகுதிகளுக்கு இன்னும் ஒரு ஆண்டுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி மூலம் செய்யப்படும் இந்த பணிகள் தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் 54 இடங்களில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன்மூலம் மழை காலங்களில் கிடைக்கும் நீரை ஸ்பாஞ்ச் உறிஞ்சி வைத்துக்கொண்டு, நிலத்தடி நீராக மாற்றும்.

186 ஏரிகள் மற்றும் குளங்கள், 15 கோயில் குளங்களை சீரமைத்து மழை நீரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்களை ஒட்டி, வண்டல் வடிகட்டி குழியுடன் இணைந்த 5 ஆயிரத்து 846 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். தற்போது குளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் புத்துயிர் காரணமாக குளங்களின் சேமிப்புத் திறன் அதிகரிக்கப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

* 186 ஏரிகள் மற்றும் குளங்கள், 15 கோயில் குளங்களை சீரமைத்து மழை நீரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* மழைநீர் வடிகால்களை ஒட்டி, வண்டல் வடிகட்டி குழியுடன் இணைந்த 5 ஆயிரத்து 846 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம்.

* சென்னையில் 54 இடங்களில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன்மூலம் மழை காலங்களில் கிடைக்கும் நீரை ஸ்பாஞ்ச் உறிஞ்சி வைத்துக்கொண்டு, நிலத்தடி நீராக மாற்றும்.

The post புனரமைப்பு பணியால் புத்துயிர் பெற்றது கனமழையால் 59 குளங்கள் நிரம்பின: நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Indian ,London ,Los Angeles ,United States ,
× RELATED சென்னையில் 6 செ.மீ. மழை மட்டுமே...