×

திருமங்கலம் – கொல்லம் நான்கு வழிச்சாலையில் புதிய சர்வீஸ் ரோடு ஒரே வாரத்தில் சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

திருமங்கலம், ஜூன் 16: திருமங்கலம் – கொல்லம் நான்குவழிச்சாலையில் சேடபட்டி விலக்கு பகுதியில் அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை, உருவான ஒரு வாரத்தில் சேதமடைந்ததுள்ளது வாகன ஓட்டிகளிடம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. திருமங்கலத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. அதிக சுற்றுலா தலங்களை கொண்டிருக்கும், இந்த சாலையில் ஏராளமான வளைவுகள் இருந்தன. இதன் காரணமாக நீண்ட நாள்களுக்கு பின்பு தற்போது நான்கு வழிச்சாலையாக திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திலிருந்து பணிகள் துவங்கி, ராஜபாளையம் வரையில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆலம்பட்டி கிராமம் அருகே சேடபட்டி விலக்கு பகுதி மற்றும் கட்ராம்பட்டி விலக்கு பகுதிகளில் சர்வீஸ் ரோடுடன் கூடிய புதிய மேம்பாலங்கள் அமைகின்றன. புதியதாக அமைக்கப்படும் சர்வீஸ் ரோடு வழியாக சேடபட்டி வழியாகவும், கட்ராம்பட்டி வழியாகவும் சுற்றுவட்டார கிராமபகுதிகளுக்கு வாகனங்கள் சென்றுவர முடியும் என்பதால், விபத்துகள் குறைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் மேம்பாலத்துடன் கூடிய இந்த சர்வீஸ் ரோட்டிற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் பெரும் வரவேற்பு இருந்தது. இதன்படி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆலம்பட்டி அருகே சேடபட்டி விலக்கு பகுதியில் புதியதாக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. சேடபட்டி பிரிவிலிருந்து திருமங்கலம் நகர் நோக்கி வரும் வழியில் போடப்பட்ட ஒருசில தினங்களில் தார் பெயர்ந்து சர்வீஸ் ரோடு பலத்த சேதமடைந்துள்ளது. இது வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கிராமபுற சாலைகள் கூட தற்போது மழை, வெயிலுக்கு பெயர்ந்து போகாமல் பல ஆண்டுகள் தாக்கும் பிடிக்கும் நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்ட ஒருவாரத்திலேயே சேதமானது, அதன் தரத்தினை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதேபோல் புதிய நான்கு வழிச்சாலை தரமற்ற நிலையில் அமைந்தால், மின்னல் வேகத்தில் சென்றுவரும் வாகனங்களின் நிலை என்னவாகும் என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருமங்கலம் பகுதியிலிருந்து சேடபட்டி விலக்கு பகுதிக்கு சென்று சேடபட்டி சாலையில் திரும்பி செல்லும் வாகனங்களுக்கு வசதியாக அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்கவேண்டும் என, ஆலம்பட்டி, திரளி, அச்சம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வேகத்தடைகள் எதுவும் இல்லாத காரணத்தினால், வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளதாக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.

The post திருமங்கலம் – கொல்லம் நான்கு வழிச்சாலையில் புதிய சர்வீஸ் ரோடு ஒரே வாரத்தில் சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirumangalam-Kollam ,Tirumangalam ,-lane ,Sedapatti ,Kollam ,Kerala ,Tirumangalam – ,Kollam four-lane ,Dinakaran ,
× RELATED குளிக்கும்போது வீடியோ எடுத்து...