×

‘தவளை போல கூச்சல் போட்ட அண்ணாமலையை காணவில்லை’; எம்ஜிஆருக்கு சத்துணவு திட்டம் போல் ஸ்டாலினுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: விக்கிரவாண்டியில் திருமாவளவன் பேச்சு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுக கூட்டம் மற்றும் திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை விக்கிரவாண்டியில் நடந்தது. உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்பி ஆகியோர் தலைமை தாங்கினர். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன். கௌதமசிகாமணி வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்எஸ் சிவசங்கர், சி.வெ. கணேசன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, ரவிக்குமார் எம்.பி, விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது:
இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய அளவுக்கு வல்லமை வாய்ந்த ஒரு தலைவராக தமிழக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் தொடர்ச்சியான வெற்றியை தமிழக அரசியல் வரலாற்றிலேயே சாதிக்க முடிந்ததில்லை. 1980 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியை எம்.ஜி.ஆர் தழுவினார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதிகள் 234. இந்தியாவில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள் 234. இதுதான் இந்தியா கூட்டணிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள ஒற்றுமை.

எம்ஜிஆருக்கு சத்துணவு திட்டம் எப்படி என்று சொல்வார்களோ, அதைப்போல வரலாறு இனி எப்போதும் காலை சிற்றுண்டி திட்டம் என்றால் தளபதி ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டமாகும். எண்ணற்ற பல திட்டங்களை மக்களுக்கு கொடுத்து மக்கள் நலன்களில் அக்கறை காட்ட கூடிய ஒரு முதல்வராக இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் மழை காலத்து தவளை போல கூச்சல் போட்டுக் கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே இருக்கிறார். அவரை காணவில்லை. சனாதன சக்திகளுக்கு இடமில்லை என்று தேர்தல்களின் மூலம் மக்கள் தீர்ப்பளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேசுகையில், இன்னும் தொடர்ந்து எத்தனை தேர்தல் வந்தாலும் இந்த கூட்டணி தொடர் வெற்றியாக தமிழ்நாட்டில் இருக்கும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றிருப்பது முதலமைச்சரின் 3 ஆண்டுகளாக பொற்கால ஆட்சிக்கு கிடைத்திருக்கிற மாபெரும் வெற்றியாகும். என்றார்.

‘‘எதிர்த்து நிற்க ஆளே இல்லை’’
அமைச்சர் பொன்முடி பேசும்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முதலில் வேட்பாளரை அறிவித்தார். தேர்தலில் பணியாற்ற அமைச்சர்கள், எம்எல்ஏ ஆகியோர் கொண்ட பணிக்குழுவையும் நியமித்தார். ஆனால் மற்ற கட்சிகள் அன்னியூர் சிவாவை எதிர்த்து யாரை நிற்க வைப்பது என்று தெரியாமல் குழம்பி உள்ளனர். எதிர்த்து நிற்க ஆளே இல்லை. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி என்பது உறுதியாகிவிட்டது. இத்தேர்தலில் நம் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்றார்.

The post ‘தவளை போல கூச்சல் போட்ட அண்ணாமலையை காணவில்லை’; எம்ஜிஆருக்கு சத்துணவு திட்டம் போல் ஸ்டாலினுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: விக்கிரவாண்டியில் திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Vikravandi ,All India DMK ,Annieyur Siva ,DMK ,Higher Education Minister ,Ponmudi ,Jagadratsakan ,MGR ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்!