×

ஜம்மு என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் பலி: சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு, 6 வீரர்கள் காயம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு கத்ராவில் உள்ள சிவ்கோரி கோயில் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 41 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் தோடா மாவட்டத்தில் உள்ள சத்தர்கல்லாவில் உள்ள சோதனை சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 5 ராஷ்ட்ரிய ரைபிள் படை வீரர்கள் மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

இதனிடையே சர்வதேச எல்லை அருகே கதுவா மாவட்டத்தில் உள்ள சைதா சுகல் கிராமத்தில் 2 தீவிரவாதிகள் பதுங்கி இருந்துள்ளனர். இவர்கள் அங்குள்ள வீடுகளில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். அவர்களை பார்த்து சந்தேகமடைந்த கிராம மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உள்ளூர் போலீசார், ராணுவம் , சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்த கூட்டுப்படையினர் அங்கு விரைந்து கிராமத்தை சுற்றி வளைத்தனர். அதிகாலை 3 மணியளவில் பாதுகாப்பு படையினரை நோக்கி பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கடும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

போலீசாரின் வாகனங்கள் மீது தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். போலீஸ் மீது கையெறி குண்டுகளை வீச முயற்சித்த ஒரு தீவிரவாதி துப்பாக்கி சூட்டில் பலி ஆனான். தொடர்ந்து சுமார் 15 மணி நேரம் வீரர்கள் நடத்திய தீவிர தாக்குதலில் அவனது கூட்டாளியான மற்றொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டான்.
இந்த தாக்குதலின்போது சிஆர்பிஎப் வீரர் கபீர் தாஸ் படுகாயம் அடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவிய நிலையில் அடுத்தடுத்த தீவிரவாத தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகின்றது. என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.

The post ஜம்மு என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் பலி: சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு, 6 வீரர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Jammu ,CRPF ,Kashmir ,Shivgori Temple ,Kathra ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள்...