×

விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து உயர்நீதிமன்றமே முடிவு செய்யும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டதால், தேர்தல் தொடர்பான மனுவை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே புகாராக அளிக்க முடியும். தற்போது விருதுநகர் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேமுதிகவில் இருந்து நேற்று பிற்பகல் சென்னையில் புகார் அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம்தான் இதுதொடர்பாக புகார் அளிக்க வேண்டும். ஆனாலும், இது தேர்தல் தொடர்பான புகார் என்பதால் உயர்நீதிமன்றத்தின் மூலம் தான் தீர்க்கப்பட வேண்டும். வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு கணக்கு என்பது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், உரிய ஆவணங்கள் அடிப்படையில் திரும்பத் தரப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 6 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடைபெற்றபோதும் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருப்பார்கள். தற்போது தேர்தல் நடைமுறைகள் முடிந்துள்ள நிலையில், இப்போதும் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மின்னணு இயந்திரங்கள் பயன்பாட்டுக்குப் பின் அவற்றை மீண்டும் பாதுகாப்பாக வைக்க தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கெனவே 34 மாவட்டங்களில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அதில் மாவட்டங்களுக்குள் அடங்கிய சட்டப்பேரவை தொகுதி வாரியாக இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். இதுதவிர, மேலும் 6 மாவட்டங்களில் கிடங்குகள் கட்ட ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டு, மாநில அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* குறைந்த வாக்குகள் பதிவானது குறித்து வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு
குறைந்த வாக்குகள் பதிவான தொகுதிகளில் அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். இதற்கு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் தொகுதி, வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்யப்படும். பொதுவாக வாக்குப்பதிவு குறைவுக்கு வாக்காளர்களின் இடம்பெயர்தலும் காரணமாக கூறப்படுகிறது. இரட்டை பதிவுகள் பொறுத்தவரை தற்போது தொகுதிக்குள் மட்டுமே சோதனை செய்யும் வசதி உள்ளது. இனி தேசிய அளவிலும் ஒரு நபருக்கு பல வாக்காளர் பட்டியலில் பதிவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கான நடைமுறை வரவேண்டும். மாநிலத்துக்குள் இந்த நடைமுறை குறித்து சோதனை நடத்தப்பட்டது. ஆனால், பெரிய அளவிலான எண்ணிக்கை இருந்ததால் தேர்தல் நேரத்தில் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள இயலவில்லை. தற்போது தேர்தல் நடைமுறை முடிந்துவிட்டதால், இனி இதுகுறித்த ஆய்வுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

The post விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து உயர்நீதிமன்றமே முடிவு செய்யும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : High Court ,Virudhunagar ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Chennai ,Sathyaprada Saku ,Court ,Dinakaran ,
× RELATED கார்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கு...