×

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் படுதோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்

திருமலை: ஆந்திராவில் ஜெகன்மோகன் தோல்வி அடைந்தது ஏன் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் 2019ம் ஆண்டு தேர்தலில் மக்களும் ஜெகனுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுப்போம் என ஒய்எஸ்ஆர் காங் ஜெகன் மோகன் கட்சியை 151 இடங்களில் வெற்றி பெற செய்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் சந்திரபாபு ஆட்சியில் கட்டப்பட்ட பொது மக்களிடம் குறைகளை கேட்பதற்காக கட்டிய பிரஜா மேடையை இடித்தார். தலைநகர் இல்லாத மாநிலத்தில் 34 ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் எந்தவித விவாதம் இல்லாமல் நிலம் கையகப்படுத்தி அமராவதி தலைநகர் மேம்பாட்டு ஆணையம் அமைத்து தலைநகருக்கான பணிகள் நடந்ததை அப்படியே கைவிடப்பட்டு அந்த நிலத்தை வேறு திட்டங்களுக்கு வழங்கி மூன்று தலைநகர் என கூறி தலைநகர் கூட இல்லாமல் செய்தார்.

போலவரம் அணை கட்டும் பணியில் ஐந்து ஆண்டுகளில் 10 சதவீதம் கூட செய்யவில்லை. புதியதாக தொழில் முனைவர்கள் மாநிலத்திற்கு வர அச்சமடையும் சூழல் ஏற்படுத்தியதோடு, ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகள் ஆந்திர மாநிலத்தை விட்டு வெளியேறியது. மாநில வளர்ச்சியை முற்றிலும் முடக்கிவிட்டு நலத்திட்டம் வழங்குவதாக கூறி ரூ.2.74 லட்சம் கோடி வழங்கியதாக கூறும் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும் மது ஒழிப்பு என்று கூறி மாநில அரசே ஒயின் ஷாப்களை ஏற்று நடத்தி வந்தது. அவர்கள் கட்சியினரிடம் சொந்த நிறுவன மது விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேலும் மின்சாரம் கட்டணம், பஸ் கட்டணம், பெட்ரோல், டீசல், வீட்டு வரி, குப்பைக்கு வரி என கூறி மக்களிடம் இருந்து வரிச்சுமை ஏற்றி மக்களுக்கு நலத்திட்டம் என வழங்கியதாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டு உள்ளது. மணல், கனிமம், கிரானைட் சுரங்கம் கொள்ளை, பல இடங்களில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் அவரது கட்சியினர் ஈடுப்பட்ட நிலையில் கண்டு கொள்ளாமல் இருந்ததோடு எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு வந்தது. மேலும், ஜெகன் ஆட்சியில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. அத்தோடு புதிதாக தொழில் தொடங்க வரும் நிறுவனங்களிடம் பேரம் பேசியதால், கடந்த 5 ஆண்டில் எந்த பெரிய தொழிலும் ஆந்திராவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

அவ்வாறு உள்ள நிலையில் மக்களுக்கு நலத்திட்டம் வழங்கினால் ஓட்டு வந்து விடும் என்ற கனவில் இருந்த ஜெகன் மோகனுக்கு யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி வைத்தியத்தை மக்கள் ஓட்டு என்ற உரிமை மூலம் ஆந்திர மக்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக வாக்காளர்கள் ஐதராபாத், பெங்களூர், சென்னை, அமெரிக்கா, துபாயில் இருந்து கூட வந்து தங்கள் வாக்கு உரிமையை செலுத்தி சென்றனர். ஆந்திர அரசியலில் ஜெகன் மோகன் அரசுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு அரசு என்பது மக்கள் மீது வரி சுமத்தி ஏழைகளுக்கு நலத்திட்டம் என பணம் வழங்கி மாநில வளர்ச்சியை கண்டு கொள்ளாவிட்டால் எந்த அரசாக இருந்தாலும் இந்த நிலை தான் என்பதற்கு உதாரணம் ஆந்திர தேர்தல் முடிவு இருக்கும். ஆனால் ஜெகன் மோகன் மட்டும் தோல்வியை ஏற்காமல் மக்களுக்கு ரூ.2.75 லட்சம் கோடி வழங்கினோம் அவர்கள் துரோகம் செய்து விட்டனர் என்று கூறி இருப்பது அவரின் ஒருதலை போக்கிற்கான முடிவு என அரசியல் வல்லுனர்களும் அவரது கட்சியை சேர்ந்த அடிமட்ட தொண்டர்களும் கூறுகின்றனர்.

The post ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் படுதோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Jaganmohan ,Andhra state ,Thirumalai ,Andhra Pradesh ,2019 elections ,Jagan ,YSR Congress ,Jagan Mohan ,Dinakaran ,
× RELATED முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டின் ஒருபகுதி இடிப்பு..!!