×

திராவிட கொள்கைதான் இனி தமிழகத்தின் எதிர்காலம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், ஜூன் 5: ராவிட கொள்கை கொண்ட கட்சிகளுக்குதான் இனி தமிழகத்தில் எதிர்காலம் உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூரில் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக பார்க்கிறேன். கலைஞர் காலத்திலும் நூற்றுக்கு நூறு வென்றிருக்கிறோம். இன்றைய சூழலில் எங்கள் தளபதி ஸ்டாலினின் திறமையால் வெற்றி பெற்றுள்ளோம். அபரிமிதமான செல்வாக்கோடு தங்களை ஆட்டி அசைக்க முடியாது என எண்ணிக் கொண்டிருந்த பாஜகவுக்கு, அப்படி அல்ல நீங்கள், உங்களையும் மக்கள் கேள்வி கேட்க முடியும் என இந்த தேர்தல் மூலம் மக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

பாஜவின் வெற்றி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நாட்டு மக்களை உஷாராக வைக்கும் நிலைமை ஊடகங்களுக்கு உள்ளது என்பதை கூறுகிறேன். எனது மகன் பாராளுமன்றத்தில் அவர் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடத்தில் அவர்களை அணுகி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். என்றைக்கும் அவர்களின் தோழனாகவே தன்னை நினைத்து பணியாற்ற வேண்டும் என எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலை தோற்றது மக்கள் விருப்பம். நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற காரணம் திமுக ஆட்சி மக்களை கவர்ந்திருக்கிறது. இதை மக்கள் நம்புகிறார்கள் என்றுதான் அர்த்தம். நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தால் மத்தியில் அனுசரணையாக போய் மக்களின் நலனுக்காக செயல்படுவோம். எதிர்க்கட்சியாக இருக்கும் பட்சத்தில் நல்ல திட்டங்களை வரவேற்போம். அல்லாத திட்டங்கள் இருந்தால் எதிர்ப்போம். இனி தமிழகத்தில் திராவிட கொள்கைகளை கொண்ட கட்சிகளுக்குத்தான் எதிர்காலம் என்பதை இந்த தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post திராவிட கொள்கைதான் இனி தமிழகத்தின் எதிர்காலம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Durai Murugan ,Vellore ,Minister ,Duraimurugan ,Ravi ,DMK ,general secretary ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...