×

விவசாயத்திற்கு ரசாயன உரத்தை தவிர்த்து நடமாடும் உரக்கடையான மாடுகளின் சாணத்தை பயன்படுத்துங்க

*பஞ்சகாவ்யா பலன்கள் ஏராளம்

*இயற்கை விவசாயிகள் ‘அட்வைஸ்’

திண்டுக்கல் : விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்க ரசாயன உரம் பயன்படுத்தப்படுவதால், பெரும்பாலான நோய்கள் வரக்காரணமாக அமைவதோடு, மனிதகுலம், இயற்கை வளத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே, விவசாய சாகுபடியில் ரசாயன உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில், எங்குபார்த்தாலும், குறைந்த நாட்களில்அதிக மகசூல் பெற செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்தி காய்கறிகள், தென்னைமரங்கள், பழவகைகள், நெல், வாழை, வெள்ளரி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதில் விளைந்த உணவுவகைளை உட்கொள்வதால், உடல்உபாதை ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வரக்காரணமாக அமைகிறது.

ரசாயன உரத்தால் நிலங்களில் உள்ள புழுக்கள் செத்து மடிவதால், மண்ணில் உள்ள சத்துக்கள் குறைந்து, மலட்டுத்தன்மை ஏற்பட்டு, எந்தபயிர்களையும் விளைவிக்க முடியாத நிலமாக மாறிவிடுகிறது. அதேபோல், ரசாயன உர பயன்பாட்டால், சிறுவயதிலே சிறுநீரக கோளாறு, இதய பிரச்னை, சர்க்கரை வியாதி, கேன்சர் என புதுப்புது வகையான நோய்கள் தாக்கி, மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால், வருங்கால சந்ததியினர் மிகக் கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும் என்பதை மக்கள் உணர வேண்டும்.

காய்கறி, பழவகைகள் உற்பத்தி செய்ய இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்க விவசாயிகள் முன்வர வேண்டும். குறைந்த மகசூல் கிடைத்தாலும் ஆரோக்கியமாக வாழ முடியும். செயற்கை உரங்கள் பயன்பாட்டை அரசு ஊக்குவிப்பதை தவிர்த்து, இயற்கை முறையில் விவசாயம் செய்யதேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயற்கை உரத்தால் உணவுபொருட்களில் இருக்கும் நச்சுகளுடன், வியாபார நோக்கத்திற்காக சேர்க்கப்படும் ரசாயன உரநச்சுகள் ஏராளம். புதுப்புது வகையான நோய்கள் தாக்கி, சிறுவயதிலே உடல் உறுப்புகள்பாதித்து, உயிரிழக்கும் நிலையில் வாழ்கிறோம்.மண்ணில் நச்சுதன்மை அதிகரித்து, எந்த வகையான செடி,கொடிகளையும் வளர்க்க முடியாமல் போகிறது. உணவுபொருட்களை குறிப்பிட்ட காலஇடைவெளிக்குள் பயன்படுத்த வேண்டும். பேக்கிங் உணவுகளை தவிர்க்க வேண்டும். பாரம்பரிய உணவு வகைகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்து அவற்றை பயன்படுத்த பழக வேண்டும். தரமான தானியங்களை உற்பத்தி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இயற்கை விவசாயிகள் கூறியதாவது: மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிட்டால் தேவைக்கு ஏற்ப சத்துக்கள் பயிருக்கு கிடைக்கும். குறிப்பாக தழைச்சத்து தரும் யூரியா அதிகம் இடுவதால் பூச்சிகள் அதிகம் பயிரை பாதிக்கின்றன. முன்பு விவசாயத்தில் நாட்டு பசுமாடு முக்கிய பங்கு பெற்றது. காலப்கோக்கில் கிடை அமர்த்துவது, வயலுக்கு குப்பை அடிப்பது மேலும் பசுந்தழை உரங்களான எருக்கு, கொழிஞ்சி இலைகளை இட்டு மடக்கி உழவு செய்வது போன்ற செயல்கள் குறைந்துவிட்டன.

பசுமாட்டில் கிடைக்கும் ஜந்து வகையான பொருட்களான சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றை முறையாக பயன்படுத்தினால் உரம் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை. எனவேதான் நாட்டு பசுமாடு நடமாடும் உரக்கடை என அழைக்கப்படுகிறது.அமுதகரைசல், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் போன்ற அங்கக உரங்கள் தயாரிக்க ஐந்து பொருட்களும் தேவை. மாட்டு கோமியத்தில் லட்சகணக்காண நலம் தரும் நுண்ணுயிர்கள் உள்ளன.

கிடை அமர்த்தும் போது இவை எளிதில் பயிருக்கு கிடைத்தது. 200லி நீரில் 10கிலோ சாணம், 10லிட்டர் கோமியம், 2கிலோ பயறு மாவு, 2கிலோ நாட்டு வெல்லம் மற்றும் கால் கிலோ வயல்மண் சேர்த்து தினசரி காலை மாலை கலக்கி விடவேண்டும். 10நாட்களில் ஜீவாமிர்தம் கிடைக்கும்.

இதனை சாணத்துடன் கலந்து வைத்திருந்து நடவிற்கு முன்பு வயலில் இடும்போது தழைசத்து கிடைக்கிறது. யூரியா இடுவதை குறைக்கலாம். எனவே விவசாயிகள் நாட்டு பசுமாட்டில் கிடைக்கும் பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்தி ரசாயன உரங்கள் மண் பரிசோதனை பரிந்துரைப்படி இட்டு பயனடையலாம், என்றனர்.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இவைகளில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை வழி உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

நன்றாக மக்கிய தொழு உரம், மண்புழு உரம், மண்ணின் பௌதிக குணத்தை மேம்படுத்தி உற்பத்தி தன்மையை அதிகரித்து கொடுக்கும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இயற்கை முறையிலேயே அளிக்கும். மேலும் ஊட்டமேற்றிய தொழு உரம், குறைந்த அளவு ரசாயன உரம், இயற்கை உரம் கலந்த கலவையாக பயன்படுத்தலாம். காய்கறி விதைகள் விதைப்பதற்கு முன் டிரைகோடெர்மா விரிடி போன்ற உயிர் பாதுகாப்பு மருந்துகளை கலந்து விதை நேர்த்தி செய்தால் நாற்றங்கால் நிலையில் ஏற்படும் நோய் தாக்குதலை தடுக்கலாம். , என்றனர்.

பசுந்தாள் உரம் அவசியம்

திண்டுக்கல் மாவட்ட இயற்கை முன்னோடி விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் தொடர்ந்து உயர் விளைச்சல் ரகங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யவேண்டும். பயிர் சுழற்சி முறைகளை கடைபிடிக்காமலும், அதிக ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. ஆகையால், மண் வளத்தினை பாதுகாக்க நன்கு முக்கிய தொழு உரம், மண்புழு உரம், பசுந்தாள் உரங்களான சணப்பு, தக்கைப்பூண்டு, பசுந்தழை உரங்களான கொளுஞ்சி, நொச்சி, எருக்கு மற்றும் கிளைரி சிடியா போன்றவற்றை அடி உரமாக கடைசி உழவில் இட்டால் மண்வளம் பாதுகாக்கப்பட்டு பயிர்கள் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும்.

பஞ்சகாவ்யா போன்ற திரவநிலை உரங்களை தெளிப்பதால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் பூ பூக்கும் தன்மை அதிகரிக்கும். வேப்பம் புண்ணாக்கு கரைசல், வேப்ப எண்ணை, வேப்பங்கொட்டை சாறு போன்ற வேம்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தலாம். எனவே விவசாயிகள் ரசாயன உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை வழி உரம் மற்றும் பயிர்ப்பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும், என்றனர்.

The post விவசாயத்திற்கு ரசாயன உரத்தை தவிர்த்து நடமாடும் உரக்கடையான மாடுகளின் சாணத்தை பயன்படுத்துங்க appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,