×

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கோடை மழையால் குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு: அனுமன் நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது


பணகுடி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கோடை மழையால் பணகுடியில் உள்ள அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அத்துடன் குத்திரபாஞ்சான் அருவியில் கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இதனால் மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் கத்திரி வெயில் காலம் முடிவடைதற்குள் வழக்கத்துக்கு மாறாக கோடை மழை பெய்ய தொடங்கியது.

இதனால் படிப்படியாக வெப்பம் குறைந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அங்கு உற்பத்தியாகும் குத்திரபாஞ்சான் அருவி, கன்னிமார் ஓடை, உலக்கை அருவி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அனுமன் நதியில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மியாபுதுக்குளம், நகரைகுளம், பரிவிரிசூரியன் குளம், வீரபாண்டியன் குளம் உள்ளிட்ட 56 குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கன்னிமார் தோப்பு பகுதி கால்வாய் மூலம் தண்டையார் குளம் அணைக்கட்டு பகுதிகளிலும் லேசான நீர் வரத்து உள்ளது.

மேலும், பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளில் குற்றாலம் என அழைக்கப்படும் குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. மழை காலங்களில் குற்றாலத்தை போன்று அருவியில் தண்ணீர் கொட்டும் இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குளித்து விட்டு செல்வது வழக்கம். தற்போது கோடைகாலம் என்ற போதிலும் மழை பெய்து வருவதால் குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குத்திரபாஞ்சான் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளது. மேலும், மழை காரணமாக பணகுடி அருகே தளவாய்புரம் மற்றும் அதனை சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களிலுள்ள பயிர்கள் நீரில் முழ்கின. இதனால் விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது.

The post மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கோடை மழையால் குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு: அனுமன் நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Gutrabanjan ,Hanuman river ,Panagudi ,Gutrabanchan ,Nellai district ,Dinakaran ,
× RELATED குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது