×

கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் * அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதியது * 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்காக திரண்டனர்

திருவண்ணாமலை, மே 23: திருவண்ணாமலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் விடியவிடிய கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் தரிசனம் செய்ய 5 மணி நேரமானது. பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக எழுந்தருளிய சிறப்புக்குரிய இக்கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி வழிபாடும், கிரிவலமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அகந்தை அழிக்கும் ஜோதிப்பிழம்பான அண்ணாமலையார் கிரி வடிவில் எழுந்தருளியிருப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் அண்ணாமலையை வலம் வந்து வழிபடுகின்றனர்.

அதன்படி, திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 7.16 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது. கிரிவலம் செல்ல உகந்த நேரம் தொடங்கியபோதும், நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. விட்டு விட்டு மிதமாக பெய்த கோடை மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் பக்தர்கள் வெள்ளளாக காட்சியளித்தது.

கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்குப் பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதிகாலை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டும் ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால், தரிசன வரிசை கோயில் வெளி பிரகாரத்தில் தேரடி வீதி வரை நீண்டிருந்தது. எனவே, சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறை காரணமாகவும், வெயில் தணிந்திருப்பதாலும், கிரிவல பக்தர்களின் வருகை நேற்று வெகுவாக அதிகரித்தது. அதோடு, வெளிமாநில பக்தர்களின் வருகையும் வழக்கத்தைவிட அதிகரித்திருந்தது. பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 34 ஏசி பஸ்கள் உள்பட 1,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதோடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதையொட்டி, திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் நேற்று செயல்பட்டன. திருவண்ணாமலை நகருக்குள் சுற்றுலா கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கவில்லை. சென்னை பீச் ஸ்டஷனில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வழியாகவும், விழுப்புரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. சிறப்பு ரயில்களிலும், வழக்கமாக இயக்கப்படும் தினசரி ரயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

The post கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் * அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதியது * 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்காக திரண்டனர் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Purnami Krivalam ,Krivalam ,Annamalaiyar temple ,Panchabhuta ,
× RELATED பௌர்ணமி கிரிவலத்தையொட்டி...