×

முத்துப்பேட்டை பகுதியில் தொடர் கோடை மழையால் அலையாத்திக்காடுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பகுதியில் தொடர் மழை காரணமாக அலையாத்திக்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்தது. முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவுக் கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன.

மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவிரி ஆற்று படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை இந்த அலையாத்திகாடு நீண்டுள்ளது.

இந்த முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகாக பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்குச் செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று காட்டுக்குள் சென்றுவிட்டு வரும் சுற்றுலா பயணிகள் கூறத்தவறுவதில்லை.

அந்த அளவிற்கு ஒட்டு மொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொக்க பூமியாக இங்கு காணமுடியும். அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தற்போது விடுமுறை காலம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிலிருந்து வருகின்றனர்.

குறிப்பாக திருச்சி, தஞ்சை நாகை புதுக்கோட்டை மாவட்டங்கள் உட்பட தொலைதூரத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்து வந்தனர். இதில் மாணவர்கள் சிறுவர்கள் அதிகளவில் தங்களது பெற்றோர்களுடன் இங்கு வந்து உற்சாகத்துடன் படகில் பயணம் செய்து வந்தனர். அதற்காக அலையாத்திகாட்டிற்கு அழைத்து செல்லும் வனத்துறையின் படகுகள் கிடக்கும் ஜாம்புவானோடை படகு துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் படகுகள் சுற்றுலா பயணிகளை ஏற்றி உள்ளே அழைத்து செல்வதும் திரும்பி வருவதுமாக களைக்கட்டி காணப்பட்டது.

இந்நிலையில் முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக மிகவும் குறைவான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக இருப்பதால் வருபவர்கள் நீண்ட நேரம் காட்டையும், அதன் ஆற்று வழி பாதையையும் படகில் பொறுமையாக அமர்ந்து சாரல் மழையும் ரசித்து வருகின்றனர்.

The post முத்துப்பேட்டை பகுதியில் தொடர் கோடை மழையால் அலையாத்திக்காடுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Alayathikkad ,Muthupettai ,Alayathikkadu ,continent of ,Asia ,Muthupet ,Dinakaran ,
× RELATED தண்ணீர் நிரம்பி இருப்பதால்...