×

மதுரை கோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இலவச பேருந்தில் 54 கோடி பெண்கள் மகிழ்ச்சி பயணம்: மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 8.46 லட்சம் பேர் பயன்

மதுரை, மே 14: மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தில், கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 890 பஸ்களில் 54 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 8.46 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்றான, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண திட்டம் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தால் இதுவரை பயனடைந்த மகளிரின் எண்ணிக்கை 350 கோடிக்கும் மேல் செல்கிறது. குறிப்பாக மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைக் ெகாண்ட மதுரை அரசு போக்குவரத்துக்கழக கோட்டத்தில் 890 பஸ்களில் தினமும் 5.38 லட்சம் பேர் கட்டணமின்றி பயணம் செய்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 54 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

உயர்கல்வி, பணி ஆகிய காரணங்களுக்காக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணங்களை அமைத்துக் கொடுப்பதும், பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும், பெண்களின் சமூகப் பொருளாதாரத் தேவைக்கு உகந்ததாக அமையும். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்துப் பெண்களும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

கல்லூரி மாணவிகள், வீட்டில் இருந்தபடியே சிறு, குறு தொழில் செய்யும் இல்லத்தரசிகளுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது. சமூக அமைப்பின் நிர்வாகி சாந்தி கூறும்போது, ‘‘கலைஞர் முதல்வராக இருந்தபோது, நாட்டிற்கே வழிகாட்டியாக 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வந்து பெருமை சேர்த்தார். அதுபோல் மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டை பின் பற்றி பல மாநிலங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தி இருப்பது, மாநிலத்திற்கு பெருமமையாக உள்ளது. முதல்வர் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் மிக சிறப்பாக உள்ளது. இலவச மகளிர் பேருந்து திட்டம், உழைக்கும் பெண்களுக்கு பெரும் உதவியாக உள்ளது’’ என்றார்.

போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கட்டணமில்லா பேருந்து பயணத்தை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. பெண்கள் இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். அலட்சியமாக நடத்துவதாக புகார்கள் வந்தால், சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணமில்லா பேருந்துகளில் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு பலவித வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.

மகத்தான திட்டமான மக்களைத்தேடி மருத்துவம்…
அடுத்ததாக ஏழை, எளியோரின் இல்லம் தேடிச்சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 5.8.2021ல் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை இத்திட்டத்தின் மூலம் 2021-22ம் ஆண்டில் 2,07,417 பேரும், 2022-23ல் 3,08,024 பேரும், 2023-24ல் 3,31,020 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன்படி கடந்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 46 ஆயிரத்து 461 ஆக உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், குழு உறுப்பினர்களுடன் மாதந்தோறும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று சிகிச்சை அளிக்கின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த மகத்தான திட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.

பொதுமக்களிடையே இது சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில் பயனடைந்த மதுரை மாவட்டம், டி.ராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜிதாவின் பெற்றோர் கூறும்போது, ‘‘பெருமூளை வாத நோயினால் பாதிக்கப்பட்ட எங்கள் குழந்தையை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். அங்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். இதனால் எங்களுக்கும், குழந்தைக்கும் மிகுந்த சிரமம் ஏற்படும். இப்பொழுது ‘‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம் எங்கள் வீட்டிற்கே வந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துப் பெட்டகத்தை அளிக்கின்றனர். எங்கள் குழந்தை போல் பாதிக்கப்பட்ட பல ஏழை, எளிய குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் இதுபோன்ற மகத்தான திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றனர்.

இதேபோல் திட்டப்பயனாளி தங்கரமாலட்சுமியின் தாயார் கூறும்போது, ‘‘எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் கொரோனாவால் இறந்துவிட்டார். லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் பெருமூளை வாத நோயினால் எனது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. நான் வசிக்கும் இடத்திலிருந்து மருத்துவமனைக்கு குழந்தையை ஒரு முறை அழைத்து சென்று வர ரூ.1000 வரை செலவாகும். இதனால், எனக்கு பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமம் ஏற்பட்டது. வாரந்தோறும் மருத்துவமனை செல்ல வேலைக்கு விடுமுறை எடுக்க வேண்டும். இக்கட்டான நிலையில், தமிழ்நாடு முதல்வரின் ‘‘மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தால் வீட்டிற்கே வந்து எனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சையும், தேவையான மருந்துகளையும் வழங்குகிறார்கள். இதனால் சிரமங்கள் குறைந்துள்ளது. எனது குழந்தையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

The post மதுரை கோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இலவச பேருந்தில் 54 கோடி பெண்கள் மகிழ்ச்சி பயணம்: மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 8.46 லட்சம் பேர் பயன் appeared first on Dinakaran.

Tags : Madurai Division ,Madurai ,Virudhunagar ,Theni ,Dindigul ,Dinakaran ,
× RELATED மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை...