×

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இவிஎம், விவிபேட் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் பெயர்களை வெளியிட மறுப்பு

புதுடெல்லி: சமூக ஆர்வலர் வெங்கடேஷ் நாயக் என்பவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் விநியோகிப்பவர்கள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்குமாறு, எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனங்களிடம் கோரியிருந்தார். மேலும் உதிரிபாகங்கள் கொள்முதல் குறித்த நகலையும் வழங்கும்படி கேட்டுக்கொண்டு இருந்தார்.

வெங்கடேஷ் நாயக் மனுவிற்கு பெல் நிறுவனம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், ‘‘கோரப்பட்டுள்ள தகவலானது வர்த்தக ரகசியத்தின் கீழ் வருகின்றது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 8 1(டி)ன் கீழ் இந்த விவரங்களை வழங்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பதிலில்,” மனுவின் கேட்கப்பட்டுள்ள விவரங்களை வெளியிடுவது நிறுவனத்தின் போட்டி நிலையை பாதிக்கும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 8 1(டி)ன் கீழ் இந்த தகவல்களை தெரிவிக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் நகல் குறித்த மனுவுக்கு பதில் அளித்துள்ள நிறுவனத்தின் பொது தகவல் அதிகாரி, ‘‘ கேட்கப்பட்டுள்ள தகவல்களை வழங்கினால் அது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உதிரிபாகங்களின் விவரங்களை தருவதாக அமையும். இது தயாரிக்கப்படும் இயந்திரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே விவரங்களை வெளியிட முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இவிஎம், விவிபேட் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் பெயர்களை வெளியிட மறுப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Venkatesh Naik ,Electronics Corporation of India Ltd ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...