×

தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் 4 நாட்கள் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் இன்று முதல் 27ம் தேதி வரை 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கியதும் கோடை காலத்துக்கான வெயில் அதிகரிக்க தொடங்கிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது. படிப்படியாக அதிகரித்து வந்த வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரம் தொடங்கியதும், வெப்பத்தின் அளவு ஒரே வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

குறிப்பாக கடந்த வாரம் இயல்பு நிலையை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதனால், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச அளவாக 108 டிகிரி வரை வெயில் வறுத்தெடுத்தது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இந்தியாவின் மையப் பகுதி மற்றும் தென் பகுதியில் வெப்ப அலை வீசத் தொடங்கியது. அது குறித்து இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசியது.

அப்போது, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவின் சில இடங்கள், மேற்கு வங்கம், ராயலசீமா, கிழக்கு உத்தர பிரதேசம், மரத்வாடா, மத்திய பிரதேசத்தில் ஒரு சில இடங்கள், வடக்கு உள் கர்நாடகா, ஜார்கண்ட், சத்தீஷ்கர் மாநிலங்களில் 104 முதல் 109 டிகிரி வரை வெயில் அளவு இருந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் வெப்ப அலையின் தாக்கம் இருந்தது. தமிழ்நாட்டில் 12 இடங்களில் 104 டிகிரி முதல் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் இயல்பைவிட 5.5 டிகிரி அதிமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

அதன் தொடர்ச்சியாக சேலம், வேலூர் மாவட்டங்களில் 108 டிகிரி, தர்மபுரி 106 டிகிரி, கரூர், திருப்பத்தூர், திருத்தணி, மதுரை ஆகிய இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை அதிகமாகி 106 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சி, மதுரை நகரம், கோவை, நாமக்கல் 104 டிகிரியாக இருந்தது. கடலோரப் பகுதியில் 95 டிகிரி முதல் 99 டிகிரியாக இருந்தது. ஆனால், சென்னையில் 99 டிகிரி தான் வெயில் இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரிக்கு மேலும், 4 இடங்களில் 106 டிகிரியும், 2 இடங்களில் 107 டிகிரியும், சேலத்தில் அதிகபட்சமாக 108 டிகிரியும் வெயில் கொளுத்தியது.

வெப்ப அலை 27ம் தேதி வரை நீடிக்கும் என்றும், அதே நேரத்தில் மதியத்துக்கு பிறகு உள் மாவட்டங்களில் காற்றில் 30-50% ஈரப்பதம் இருக்கும், அதற்கு பிறகு 40-75 சதவீதம் ஈரப்பதம் இருக்கும், கடலோரப் பகுதியில் 50-85 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. உயர் வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக 23 மற்றும் 24ம் தேதிகளில் வடக்கு உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இது தவிர, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஏப்ரல் மாத முன்னறிவிப்பில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் 8 முறை வெப்ப அலை வீசும் நாள்கள் இருக்கும் என்றும், ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில் மொத்தமாக 10 முதல் 20 முறை வெப்ப அலை வீசும் நாள்கள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய பிரதேசம், குஜராத், ஒடிசா, ஆந்திரா, மத்திய பிரதேசம், விதர்பா, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் இந்த நாள்கள் இருக்கும் என்றும் கணித்துள்ளது. அதன்படி இந்தியாவின் கிழக்கு பகுதி, தென்பகுதியில் 5 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்ட்ராவில் இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புள்ளது.

தென் பகுதியில் உள் கர்நாடகா, ராயலசீமா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இன்றும், ஜார்கண்ட், பீகார், தெலங்கானா, கிழக்கு உத்ரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் 27ம் தேதி வரையும், மேற்கு உத்தர பிரதேசம், ஆந்திர கடலோரப் பகுதிகள், ஏனம், பகுதிகளில் நாளை முதல் 27ம் தேதி வரையும் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. இருப்பினும், மாலை நேரத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும் என்பதால், வெப்பம் குறையவும் வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் 4 நாட்கள் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India Meteorological Department ,Chennai ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...