×

அதிக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் என முஸ்லீம்களை இழிவுப்படுத்திய மோடி : தேர்தல் ஆணையத்தின் ஆன்மா சாந்தி அடையட்டும் என பிடிஆர் கண்டனம்!!

டெல்லி : ராஜஸ்தானில் நேற்று பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். பன்ஸ்வாராவில் நடந்த பிரசார கூட்டத்தில் மோடி பேசுகையில், “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நாட்டின் சொத்துக்களில் சிறுபான்மையினருக்கு தான் முதல் உரிமை என்று கூறியிருந்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தாய்மார்கள், சகோதரிகளிடம் இருக்கும் தங்கத்தை கணக்கெடுத்து அதை மற்றவர்களுக்கு கொடுப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நகர்புற நக்சல் மனப்பான்மை. தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் மாங்கல்யத்தை கூட விடமாட்டார்கள். அந்த அளவுக்கு தரம் தாழ்த்து நடப்பார்கள். மன்மோகன்சிங் சொன்னபடி, சிறுபான்மையினருக்கு தான் நாட்டின் சொத்தில் முதல் உரிமை என்றால், அந்த நகைகளை யாருக்கு கொடுப்பார்கள். அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் முஸ்லிம்களுக்கு, ஊடுருவல்காரர்களுக்குதான் அந்த நகைகள் தரப்படும் என்று பேசினார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இண்டியா கூட்டணி வெற்றிபெற்றுவிடும் என்ற அச்சத்தை பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு காட்டுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதவிக்காக பொய் சொல்வது , ஆதாரமற்ற விஷயங்களை எடுத்துரைப்பது எதிரிகள் மீது பொய் குற்றச்சாட்டுகளை அடுக்குவது ஆகியன ஆர்எஸ்எஸ் – பாஜகவின் பயிற்சியின் சிறப்பு என விமர்சித்த அவர், இந்திய வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் மோடியை போன்று பதவியின் கண்ணியத்தை குறைத்துக் கொண்டதில்லை என சாடினார்.

இதே போல் காங்கிரஸ் எம்பி.ராகுல் காந்தியும், மக்கள் பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காகவே மோடி இத்தகைய பொய்களை பரப்புவதாக குற்றம் சாட்டினார். முதல் கட்ட வாக்குப்பதிவின் ஏமாற்றத்திற்கு பின் மோடியின் பொய் தரம் தாழ்ந்துவிட்டதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பிரதமர் மோடி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தேர்தல் ஆணையத்தின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

The post அதிக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் என முஸ்லீம்களை இழிவுப்படுத்திய மோடி : தேர்தல் ஆணையத்தின் ஆன்மா சாந்தி அடையட்டும் என பிடிஆர் கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : PDR ,Modi ,Election Commission ,Delhi ,Rajasthan ,Banswara ,Manmohan Singh ,Congress ,
× RELATED வெறுப்புப் பேச்சு விவகாரத்தில்...