×

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, பாலகிருஷ்ணன் சந்திப்பு: அமைச்சர்கள், வேட்பாளர்களும் வாழ்த்து பெற்றனர்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை வைகோ, கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். இதேபோல அமைச்சர்கள், வேட்பாளர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. எந்தவித பிரச்னையும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.90 சதவீதம் வாக்குகள் பதிவானது குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.96 சதவீதம் வாக்குகள் பதிவானது.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று அவரது இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வேட்பாளர் துரை வைகோ ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது வைகோ சால்வை, மாலை அணிவித்து முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டதற்காக அப்போது வைகோ முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் துரை வைகோவுக்கு வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதே போல முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மத்தியக்குழு உறுப்பினர் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது கே.பாலகிருஷ்ணன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி, சி.வி.கணேசன், வேட்பாளர்கள் ஆ.ராசா, அருண் நேரு ஆகியோர் சந்தித்து பேசினர்.

இதேபோல, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோரும் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் வேட்பாளர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வெற்றி பெற வாழ்த்துகளை முதல்வர் தெரிவித்தார்.

The post தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, பாலகிருஷ்ணன் சந்திப்பு: அமைச்சர்கள், வேட்பாளர்களும் வாழ்த்து பெற்றனர் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Balakrishnan ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,Chennai ,K. Balakrishnan ,M. K. Stalin ,M.K.Stalin. ,Puducherry, Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...