×

தனியார் பள்ளிகளில் நாளை முதல் 25 சதவீதம் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்

 

வேலூர், ஏப்.21: இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நாளை தொடங்குகிறது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அந்த வகையில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 2 ஆயிரம் நர்சரி, கான்வென்ட், மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன.

இத்திட்டத்தில் எல்கேஜி அல்லது 1ம் வகுப்பில் சேருபவர்கள் 8ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013ல் அமலான கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் இதுவரை 4.60 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில், வரும்(2024-25) கல்வி ஆண்டில் இலவச சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு 22ம் தேதி(நாளை) தொடங்கி மே 20ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் அடித்தட்டு ஏழை மக்கள் இலவச சேர்க்கையை பெறமுடியும்’ என்றனர்.

The post தனியார் பள்ளிகளில் நாளை முதல் 25 சதவீதம் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaran ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...