×

இந்த வார விசேஷங்கள்

மீனாட்சி சொக்கநாதர் திக்விஜயம் 20.4.2024 – சனி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகின்றது. பட்டத்தரசியாக முடி சூட்டிக் கொண்ட மதுரை மீனாட்சி, எட்டு திசைகளிலும் தன்னுடைய ராஜ்ஜியம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக விஜயம் செய்த நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. எட்டு திசைகளையும் வெல்ல சேனைகளோடு புறப்பட்ட மீனாட்சி, இமயத்தையும் வெற்றி பெற திக்விஜயம் செய்த போதுதான், சொக்க
நாதரை மீனாட்சி சந்திக்கின்றாள். மதுரை மீனாட்சி அம்மன் சிவபெருமானின் மீது அன்பு கொண்டு இவர்தான் தன் கணவர் என்கின்ற காதலோடு பார்த்த பொழுது, பிறப்பின் போது ஏற்பட்ட மூன்றாவது மார்பகம் மறைந்தது. ஒரு நல்ல நாளில் மீனாட்சி மணமுடிப்பதாக சொக்கநாதர் உறுதியளிக்கிறார். இந்த வரலாற்று நிகழ்ச்சி இன்றைய உற்சவமாக நடைபெறுகின்றது.

பிரதோஷம் 21.4.2024 – ஞாயிறு

இன்று சித்திரை வளர்பிறை பிரதோஷநாள். பல திருக்கோயில்களில் சித்திரை விழாக்கள் நடைபெற்று வரும் இத்தருணத்தில் பிரதோஷமும் சேர்ந்து வருவது சிறப்பு. பிரதோஷ விரதம் இருப்பவர்கள் காலை முதல் மாலை உபவாசம் இருந்து மாலையில் பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் அபிஷேகங்களை தரிசித்து, பிராகாரத்தை வலம் வந்து, விரதத்தை நிறைவு செய்வதன் மூலம் பிற தோஷங்கள் எதுவாக இருந்தாலும் வெற்றி கொள்ளலாம்.

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 21.4.2024 – ஞாயிறு

மதுரையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில்சித்திரை திருவிழாவில், இன்று சொக்கநாதருக்கும் மீனாட்சி அம்மைக்கும் சுபயோக சுப வேலையில் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த வேளையில், திருமண நிகழ்ச்சிகளை நேரில் கண்டுகளிப்பவர்களும், தொலைக்காட்சி மூலம் பார்ப்பவர்களும் தங்கள் திருமாங்கல்யத்தை சுவாமியை நினைத்து மாற்றிக் கொள்வது உண்டு. இதே தினத்தில் சென்னைக்கு அருகே திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் சுவாமி சித்திரை பெருவிழாவில் இன்று சுவாமி திருத்தேரில் வலம் வருகின்றார்.

கள்ளழகர் தல்லாகுளத்தில் எதிர்சேவை 22.4.2024 – திங்கள்

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை விழா நடைபெறும் அதே வேளையில், திருமாலிரும் சோலை என்று பிரசித்தி பெற்ற கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை பெருவிழா உற்சவம் நடைபெறுகிறது. அழகர் மலையில் இருந்து, சுந்தர்ராஜ பெருமாள் தங்க பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார். கள்ளழகருக்கு அணிக்கப்படும் நகைகளின் பட்டியல் கருப்பனசாமி சந்நதி முன் வாசிக்கப்பட்ட பிறகு, அவரின் அனுமதி பெற்று, கள்ளழகர் புறப்பட்டுள்ளார். கண்டாங்கி சேலை உடுத்தி, கையில் வலைதடி, இடுப்பில் ஜமதாடு உள்ளிட்ட பழங்கால ஆயுதங்களுடன் கள்ளழகர் கோலத்தில் மதுரை நோக்கி புறப்பட்டுள்ளார் சுந்தர்ராஜ பெருமாள். மேளதாளங்கள் முழங்க சுமார் 24 கி.மீ., தாண்டி வரும் கள்ளழகர் இன்று மதுரை தல்லாகுளத்தில் எதிர்சேவை தருகிறார். மதுரை மூன்று மாவடி பகுதியில் கள்ளழகரை வரவேற்று, மதுரை நகருக்குள் அழைத்து வரும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு முழுவதும் தல்லாகுளம் பிரசன்ன வெங்டேச பெருமாள் கோயிலில் உபயங்கள் நடைபெறும் கள்ளழகருக்கு, சந்தன காப்பு அணிவிக்கப்படும். பிறகு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.

உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை 22.4.2024 – திங்கள்

63 நாயன்மார்களை போலவே சைவ மரபில் சந்தான குரவர்கள் என்று நால்வரைச் சொல்வார்கள். அதில் உமாபதி சிவாச்சாரியார் ஒருவர். அவர் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் அருகாமையில் உள்ள கொற்றவன்குடி என்னும் சிற்றூரில் அவதரித்தவர். இவருக்கு சிதம்பரம் கொற்றவன் குடி தோப்பில் திருமடம் இருக்கிறது. நடராஜர் தரிசனத்தின் போது கவிக்கொடி ஏற்றியவர். இன்று அவருடைய குருபூஜை என்பதால், அவருடைய திருமடத்தில் உமாபதி சிவாச்சாரியாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பன்னிரு திருமுறை பாடல் ஓதுதலும் நடைபெறும். இன்றைய தினம் திரு உத்தரகோசமங்கை மங்களநாதருக்கு மங்கள நாயகிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மணிவாசகப் பெருமானுக்கு திருவுருவக்காட்சி தந்த தலம் இந்தத் தலம். சொக்கலிங்க பெருமாள் பார்வதிதேவியை பரதவர் குலத்தில் பிறக்கும் படியாக சபித்து சாப விமோசனமாக இத்தலத்தில் அம்பாளை திருமணம் செய்து கொண்டு வேதப் பொருளை உபதேசம் செய்ததாக புராண வரலாறு. எனவே, மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டியே இங்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

திருவீழிமிழலை திருக்கோயில் திருத்தேர் 22.4.2024 – திங்கள்

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். மேலும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை. வீழிநாதசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் இன்று. திருவாவடுதுறை ஆதீனம் திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைப்பார்.

அழகர் வைகை எழுந்தருள்கிறார் 23.4.2024 – செவ்வாய்

இன்று பற்பல விசேஷங்கள் இருக்கின்றன. பிரசித்தி பெற்ற திருமாளிருஞ் சோலை கள்ளழகர் இங்கு வைகை ஆற்றில் இறங்குகின்ற. வண்ணப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் அவர் இறங்கும் காட்சி பரவசமான காட்சி. இதை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருப்பார்கள். இவர் உடுத்தும் வண்ண உடையைக் கொண்டு வரும் வருடத்தின் பலாபலன்களைத் தெரிந்து கொள்ளும் மரபு அக்காலத்தில் இருந்தது. பெரும்பாலும் பச்சை உடுத்தி வருவார் .அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளல் நடைபெறும்.

சித்திரை பௌர்ணமி 23.4.2024 – செவ்வாய்

இன்று எல்லா இடங்களிலும் பௌர்ணமி உபவாசமும், பூஜையும் சிறப்பாக நடைபெறும். நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாகப் புராணங்கள் சொல் கின்றன.குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.சித்ரா பெளர்ணமி தினத்தன்று, வீட்டில் சிரத்தையுடன் செய்யப்படும் பூஜையால், வீட்டில் இதுவரை இருந்த கடன் தொல்லையில் இருந்தும், பணக் கஷ்டத்தில் இருந்தும் மீளலாம். இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சித்ரகுப்த வழிபாடு 23.4.2024 – செவ்வாய்

தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று. பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர். பார்வதி தேவி வரைந்த சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதால், அவருக்குச் சித்திரகுப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. சித்ராபவுர்ணமி நாளில் விரதமிருந்து விடிய விடிய சித்ரகுப்த நயினார் கதையைப் படிப்பார்கள். அந்தக் காலத்தில் பூஜை அறையில் ஓர் ஓலைச் சுவடியில், ‘சித்ரகுப்தன் படி அளக்க…’ என்று எழுதி வைத்து வழிபடுவார்களாம். இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம். சித்ர குப்தர் அவதார தினத்தில் அவரது கதையை படித்தாலோ கேட்டாலோ நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் உடல் நலம் சீராக இருக்கும். சித்திரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனி சந்நதி உண்டு அங்கே ஏடும் எழுத்தாணியும் இன்ன பிற பொருளும் வைத்து முறையான பூஜையை நடத்தி பிரார்த்தனை செய்வார்கள் நம்முடைய குற்றங்களை பொறுத்துக் கொண்டு நல்வாழ்வு அளிப்பார் என்பதற்காக சித்ரகுப்த பூஜை சித்ரா பௌர்ணமியில் நடைபெறுகின்றது. இந்த நாளில் செய்யும் தானம், சிறி தளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம் 23.4.2024 – செவ்வாய்

பன்னிரு ஆழ்வார்களில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் மதுரகவியாழ்வார் தேவு மற்றறி யேன் என்று பாசுரம் பாடி ஆழ்வாரானவர். நம்மாழ்வாரின் பெருமையை உலகெங்கும் பரப்பியவர். “ஆசாரியனே தெய்வத்தை விட உயர்வானவர்; தெய்வத்தை விட்டாலும் ஆச்சாரியனை விடக்கூடாது. அந்த அபிமானமே ஒருவருக்கு ஆன்ம உயர்வைத் தரும்” என்கின்ற நிறைவான நெறியை எடுத்துக் காட்டியவர் மதுரகவியாழ்வார். இன்று அவர் அவதார திருநட்சத்திரம் எல்லா வைணவ ஆலயங்களிலும், திருமால் அடியார்களின் இல்லங்களிலும், அவருடைய பாசுரங்களைப் பாடி சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

இசைஞானியார் குருபூஜை 23.4.2024 – செவ்வாய்

இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப் போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில், சேக்கிழார் இணைத்துள்ளார். திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு
திருமணம் செய்து வைத்தார். அவர் குரு பூஜை தினம் இன்று.

திருக்குறிப்பு நாயனார் குரு பூஜை 24.4.2024 – புதன்

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தொண்டை நன்னாட்டில் காஞ்சி மாநகரத்தில் வண்ணார் மரபில் தோன்றியவர். சிவனடியார்களின் உள்ளத்தின் திருக்குறிப்பையுணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு `திருக்குறிப்புத் தொண்டர்’ என்று வழங்கப்படும் சிறப்புப் பெயரை உடையவரானார். சிவனடியார்களது ஆடையினைத் சலவை செய்து கொடுத்தலை தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார். இப்பணியால் துணி அழுக்குப் போவது போல் மும்மலப் பிறப்பழுக்கும் போக்குவார் ஆயினர். இவர் அடியார் மீது கொண்ட அன்பின் பெருமையை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங் கொண்டார் திருவேகம்பப் பெருமான். குளிர் மிகுந்த ஒருநாள் ஏழை போன்று மெலிந்த மேனியும், வெண்ணீற்று மேனியில் அழுக்கடைந்த கந்தைத் துணியுமாய்க் வந்தார். திருக்குறிப்புத் தொண்டர், அன்பினால் எதிர்கொண்டு விழுந்து வணங்கினார். கூப்பிய கைகளுடன், ‘தாங்கள் உடுத்துள்ள இக்கந்தையைத் துவைத்தற்குத் தாருங்கள்’ என்று கேட்டார். வந்த சிவனடியார், “இக்கந்தை அழுக்கேறிய நிலையிலிருப்பினும் குளிருக்குப் பயந்து உடுத்துள்ளேன். மாலைப் பொழுதாவதற்குள் தருவீராயின், துவைத்துத் தருவீராக’’ என்று கூறி தம் ஆடையைத் தந்தார்.
அதனைப் பெற்றுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், குளத்திற்குசென்று, முன் சிறிது அழுக்கைப் போக்கி, வெள்ளாவியில் வைத்து புளுக்கி துவைக்கத் தொடங்கினார். பெருமழை விடாது பெய்வதாயிற்று. மழைவிடுவதை எதிர்பார்த்து நின்றார். மழையோ நிற்கவில்லை. இரவுப் பொழுதும் நெருங்குவதாயிற்று. திருக்குறிப்புத் தொண்டர் “ஐயோ குளிரால் திருமேனி நடுங்குகின்ற சிவனடியார்க்கு நான் செய்ய விரும்பிய அடிமைப்பணி தவறிப் போயிற்றே’’ என்று சோர்ந்து வீழ்ந்தார். மழையோ விடவில்லை; அடியார் சொல்லிய கால எல்லையும் முடிந்துவிட்டது. முன்னமே அவரது உடையினை வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுப்பதற்கு அறியாது போயினேனே; என்று எழுந்து, ‘துணி துவைக்கும் கற்பாறையிலே எனது தலை சிந்தும்படி மோதுவேன்’ என்று தமது தலையை மோதினார். அப்போது அப்பாறையின் அருகே திரு ஏகம்பரது திருக்கை தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது. உமையொருபாகராய் இறைவன் விடைமேல் எழுந்தருளி, காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியினைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர், அன்புருகக் கைதொழுது நின்றார். அவர் குரு பூஜை தினம் இன்று.

விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Meenakshi ,Sokkanathar Digvijayam ,Sani Madurai Meenakshi Amman Temple Chitrai festival ,Madurai Meenakshi ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...