×

திருச்சூர் பூரம் திருவிழாவையொட்டி கண்கவர் வாணவேடிக்கை; மக்கள் உற்சாகத்துடன் கண்டுரசிப்பு..!!

கேரளா மாநிலம் திருச்சூரில் புகழ் பெற்ற பூரம் திருவிழாவையொட்டி கண்கவர் வாணவேடிக்கை நடைபெற்றது. திருச்சூர் பூரம் திருவிழா இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், அதற்கான நடவடிக்கைகள் ஒருமாதகாலத்திற்கு முன்னரே துவங்கிவிடும். இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர். 1700 ஆண்டுகள் பழமைவாய்ந்த வடக்கு நாதன் சிவன் கோயிலுக்கு முன்பாக தான் பூரம் திருவிழா நடைபெறுகிறது. சிவன் கோயில் இருக்கக்கூடிய தெற்கு நடை பகுதியில் பூரம் திருவிழா நடைபெறும்.

இதையொட்டி நடைபெறக்கூடிய வாணவேடிக்கை நிகழ்ச்சி என்பது சிறப்பம்சமாகும். இந்த வாணவேடிக்கை திருவிழாவை காண கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளனர். நேற்று இரவு பஞ்ச வாத்தியங்கள், இளஞ்சித்திர மேளம் முழங்க இரண்டரை மணி நேரம் குடை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இவற்றை மக்கள் ஆரவாரங்களுடன் கண்டு ரசித்தனர். இதை தொடர்ந்து தீபாவளி பண்டிகையை மிஞ்சும் வகையில் பூரம் திருவிழாவில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. வழக்கமாக பூரம் திருவிழா முடிந்தவுடன் இரவு நேரங்களில் வான வேடிக்கை நடத்தப்படும்.

ஆனால் இந்தாண்டு தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று காலை வெடித்திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. முதலில் பரமேக்காவு தேவஸ்தானம் சார்பில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. திருவம்பாடி தேவஸ்தானம் சார்பிலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்த வாணவேடிக்கைகளால், அதிகளவு ஒலி மற்றும் காற்று மாசுபடுவதாக சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் போதிலும், ஆண்டிற்கு ஆண்டு வாணவேடிக்கைகளின் அளவு அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.

The post திருச்சூர் பூரம் திருவிழாவையொட்டி கண்கவர் வாணவேடிக்கை; மக்கள் உற்சாகத்துடன் கண்டுரசிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruchur Pooram Festival ,Kerala ,Pooram festival ,India ,
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை