×

முதல் வாக்காளர்கள், 5 நாளான கைக்குழந்தையுடன் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த மக்கள் நரிக்குறவர் மக்களும் ஜனநாயக கடமையாற்றினர் குடிமகன் என்ற உணர்வு வந்துள்ளதாக பெருமிதம்

வேலூர், ஏப்.20: குடிமகன் என்ற உணர்வு வந்துள்ளதாக பெருமிதம், முதல் வாக்காளர்கள், 5 நாளான கைக்குழந்தையுடன் ஆர்வத்துடன் வந்து மக்கள் வாக்களித்தனர். நரிக்குறவர் மக்களும் வந்து ஜனநாயக கடமையாற்றினர்.
தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்ற ெதாகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது. அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மக்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்தனர். இதில் வேலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த முதல்வாக்காளர் மாணவி திலோ, பல்மருத்துவம் பயின்று வருகிறார். முதல்முறை வாக்களித்தது குறித்து கூறுகையில், ‘இதுவரையில் வாக்களிப்பதை பார்த்துள்ளேன். தற்போது வாக்களிப்பது நன்றாக உள்ளது. நாட்டுக்காக எதையோ செய்வது போன்று உள்ளது. உள்ளூர் நிலவரங்களை வைத்து இல்லாமல், இந்திய அளவில் பார்த்து வாக்களித்துள்ளேன் என்று பெருமிதம் தெரிவித்தார்.

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த முதல்வாக்காளர் சரண் பிகாம், மாணவர் கூறுகையில், ‘முதல்முறையாக வாக்களித்தது புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்களுக்கு வாக்களித்தேன், என்றார். அதே வாக்குச்சாவடி மையத்தில் சகோதரிகளான மதுமிதா பிசிஏ, வேதபிரியா பிடெக் ஆகியோர் கூறுகையில், ‘முதல்முறையாக வாக்களித்தது, நாங்கள் ஒரு குடிமகன் என்ற உணர்வு வந்துள்ளது. இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்பவர்களுக்கு வாக்களித்தோம். அதே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த அனிதா பிசிஏ, சுமித்ரா பிசிஏ மாணவிகள் கூறுகையில், ‘முதல்முறை வாக்களித்தது புதுவித அனுபவமாக உள்ளது. இந்தியாவிற்கு யார் நல்ல திட்டங்களை கொண்டுவருவார்களோ அவர்களுக்கு வாக்களித்தோம், என்றனர்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், தங்கள் ஜனநாயக கடமையை உற்சாகத்துடன் பதிவு செய்தோம். மகிழ்ச்சியாக உள்ள, என்றனர். அதேபோல் ஒடுக்கத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஜீவிதா, ஜீவா கூறுகையில், ‘முதல்முறை வாக்களித்தது நெகிழ்ச்சியாக உள்ளது. ஜனநாயக கடமையையாற்றி உள்ளோம். இதுபோல் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், என்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களிப்பதற்காக, பிறந்து 5 நாட்களே ஆன கை குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் வந்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து சென்றார். அதேபோல் ராணிப்ேபட்டை மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்றத்திற்கு உட்பட தணிகைப்போளூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க ஆர்வத்துடன வந்த நரிக்குறவர்கள், வந்திருந்து வரிசையில் நின்று வாக்களித்து சென்றனர்.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத்தொகுதிகளில், முதன்முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் 46 ஆயிரம் பேர் உள்ளதாக கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, இளம் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. அதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு இளம் வாக்காளர்களையும் செல்போனில் தொடர்புகொண்டு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வாக்களிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இளம் வாக்காளர்களை நேரடியாக தொடர்புகொண்டு வாக்களிக்க வலியுறுத்தியது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக, நேற்று பெரும்பாலான வாக்குச்சாவடிகளில், இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். மேலும், நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் தாங்கள் வாக்களிப்பது மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் உள்ளது என இளம் வாக்காளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். அதோடு, தங்கள் விரலில் வைக்கப்பட்ட மை, தங்களை நாட்டின் குடிமகனாக உணர வைத்திருக்கிறது என்றனர். அதேபோல், திருவண்ணாமலை தொகுதியில் 121 மற்றும் ஆரணி தொகுதியில் 104 திருநங்கைகள் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர். அதில், பெரும்பாலான திருநங்கைகள் நேற்று ஆர்வமுடன் வாக்களித்தனர். திருவண்ணாமலை எஸ்ஆர்ஜிடிஎஸ் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வந்த திருநங்கைகள், அங்கு ஆய்வு செய்த கலெக்டர் பாஸ்கர பாண்டியனுடன் ஆர்முடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

The post முதல் வாக்காளர்கள், 5 நாளான கைக்குழந்தையுடன் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த மக்கள் நரிக்குறவர் மக்களும் ஜனநாயக கடமையாற்றினர் குடிமகன் என்ற உணர்வு வந்துள்ளதாக பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Narikuruvar ,Vellore ,Narikuru ,Tamil Nadu ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...