×

உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு கூறியதால் இபிஎஸ் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எழும்பூர் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்பி தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் அதிமுக சார்பில் கடந்த 15ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பேசும்போது, நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளரை எதிர்த்து நிற்கிற திமுக வேட்பாளர் அவருடைய சொந்த நலனுக்காக போட்டியிடுகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவர் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் 75 சதவீத நிதியை செலவே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பேசிய இந்த பேச்சு உண்மைக்கு புறம்பானது, மக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் என்மீது அவதூறு பரப்பியுள்ளார். பொதுமக்களுக்கு சேவை செய்வதையே முழுநேர பணியாக கொண்டு செயல்படும் என்மீது தொகுதி மக்களிடமும், தமிழக மக்களிடமும் உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் எடப்பாடி பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெரும் நற்பெயர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, எடப்பாடி பழனிசாமி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500ன் கீழ் அவதூறு நடவடிக்கை எடுத்து அவரை தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் கே.வி.சக்திவேல் முன்பு மே 14ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்துவிட்டு நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த தயாநிதி மாறன் அளித்த பேட்டி:

என்னைப்பற்றி அவதூறாக பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று தெரிவித்திருந்தேன். 24 மணி நேரமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கை பதிவு செய்திருக்கிறேன். இந்த வழக்கு அடுத்த மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நிதி ரூ. 17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. 95 சதவீதத்திற்கு மேல் என் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழித்துள்ளேன். பல நலத்திட்டங்களை செய்துள்ளேன்.

எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் இப்படி பேசுகிறார். அவர் சுய நினைவோடுதான் பேசுகிறாரா என்பதும் தெரியவில்லை. தி.மு.க.வை எதிர்த்து பேச வேண்டும் என நினைத்து உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார். என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறேன். அதை கொச்சைப்படுத்தி எனக்கு அவதூறு ஏற்படுகின்ற வகையிலே எடப்பாடி பேசியதற்காகவே இந்த வழக்கை தொடுத்துள்ளேன்.

ஒரு ஆங்கில நாளேடும் இதே போன்று செய்தி வெளியிட்டது. தொகுதி மேம்பாட்டு நிதியெல்லாம் டெல்லியில் அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற தவறைதான் அண்ணாமலையும் செய்தார். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் வந்த தவறான செய்தியை நம்பி அவரும் அந்த தவறை செய்தார்.

செய்தி வந்த நாளேடு ஆசிரியரிடம் அந்த தவறை நான் சுட்டிக் காட்டினேன். உடனே அந்த ஆங்கில நாளேடு மறுப்பு தெரிவித்து அடுத்த நாளே செய்தி வெளியிட்டது. அது தெரிந்தும் கூட எடப்பாடி பழனிசாமி உண்மைக்குப் புறம்பாகதான் பேசுகிறார். அதனால்தான் இந்த வழக்கு. பகிரங்க மன்னிப்பு கேட்க முன் வராத அவரது பொய் முகத்திரையை நீதி நிச்சயம் கிழித்தெறியும்.

The post உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு கூறியதால் இபிஎஸ் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Dayanithi Maran ,EPS ,Egmore Magistrate Court ,CHENNAI ,Dayanidhi Maran ,Central Chennai DMK ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Egmore ,Chennai Egmore Magistrate Court ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு