×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கு!!

சென்னை : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. வாக்காளர் ஒருவர் வாக்களிக்கும் போது, தான் பதிவு செய்த சின்னத்தில் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை துல்லியமாகக் காட்டும் கருவியாக விவிபேட் இயந்திரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்திலிருந்தும் விவிபேட் இணைக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் காகித வடிவில் வாக்குச்சீட்டுகளாக மாறிவிடுவதால் அவற்றை பின்னர் திறந்து எண்ணும் போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் அதற்கு இணையாக விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்டுள்ள சீட்டுகளும் சரியாக இருக்கிறதா? என்பதை அறிந்துகொள்ளலாம்.

இதன்மூலம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுதலாக வேறு சின்னத்துக்கு தங்களுடைய ஓட்டு விழுந்திருந்தால் வாக்காளர்கள் அதை எளிதாக கண்டுபிடித்து புகார் அளிக்கவும் முடிகிறது. தற்போதைய நடைமுறைப்படி வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரியும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கமிலஸ் செக்வா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கங்கா பூர்வாலா, சத்ய நாராயண அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்