×

ஜோதிட ரகசியங்கள்

அரசு உயர் பதவியும் அரசியல் செல்வாக்கும் வேண்டுமா?

ஒருவருடைய ஜென்மஜாதகம் என்பது 12 ராசிகள், ஒன்பது கோள்கள் இவற்றின் அடிப்படையில் இயங்குவது. இந்த ஒன்பது கோள்களும் 12 ராசிகளின் வெவ்வேறு நிலைகளில் இயங்கி ஒருவருக்கு நடக்க வேண்டிய நற்பலன்களையும் தீய பலன்களையும் கொடுக்கின்றன. இந்த ஒன்பது கோள்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது. இதில் ராகு, கேது நிழல் கிரகங்கள். இந்த கிரகங்கள் எல்லாவற்றிற்கும் தலைமைக் கிரகம் சூரியன். சூரிய கிரகம் தந்தை, எலும்புகள், கண் பார்வை, வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் இதயத்தைக் குறிக்கிறது. ஈகோ, தைரியம், அதிகாரம், நம்பிக்கை மற்றும் அரசாங்கத்துறை ஆகியவற்றையும்
காரகங்களாகக் கொண்டிருக்கிறது.

ஒரு ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்துவிட்டால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். காரணம், பூரணமான ஒளிக் கிரகம் சூரியன். சூரியனிடத்தில் ஒளியைப் பெற்றுத்தான் மற்ற கிரகங்கள் வலிமை பெறுகின்றன.

எனவே, ஜாதகத்தில் சூரியனை முக்கியமாகப் பார்க்க வேண்டும். காரணம், அவன் ஆத்மகாரகன். சூரியனும் சந்திரனும் எதிரெதிரே பார்த்துக் கொண்டால், அது அற்புதமான பௌர்ணமி யோகம் என்பார்கள். அதைப் போலவே சூரியனும் சந்திரனும் இணைந்த நாள் அமாவாசை யோகம் எனப்படுகின்றது. ஆனால், அந்த அமாவாசை யோகம் செயல்பட குரு போன்ற சுபகிரகங்களால் பார்க்கப்பட வேண்டும். அப்படி இருந்தால் அவர்கள் பல்துறை நிபுணர்களாக இருப்பார்கள். எழுத்தாற்றல், பேச்சாற்றல், நிர்வாக ஆற்றல், பெரிய படிப்பு, உயர் பதவி எல்லாம் தடையின்றி அமையும். ஒரு ஜாதகத்தில் பத்தாம் இடத்திற்கு உரியவன் நவாம்சத்தில் சூரியனுடைய வீட்டில் அதாவது சிம்மத்தில் அமர்ந்தால், நிச்சயம் அரசாங்க உயர்பதவி பெறுபவராக இருப்பார்.

பத்தாம் இடத்திற்கும், சிம்மத்திற்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு அரசாங்கப்பதவி கிடைக்கும். நண்பருக்கு கன்னி லக்கினம். 10க்குரிய புதன் சிம்ம ராசி அதிபதியான சூரியனின் உத்திராட நட்சத்திரத்தில் மகரத்தில் சூரியனோடு அமர்ந்தார். கண்காணிப்புப் பொறியாளராக 36 ஆண்டுகள் அரசு பணி புரிந்தார்.

இன்னொரு ஜாதகம் மீன லக்கினம். குருவே 10-ஆம் இட அதிபதி. அவர் மீனத்தில் அமர்ந்து சூரியனை 5-ஆம் பார்வையால் தொடர்புகொள்ள, 35 ஆண்டுகள் அரசு மருத்துவத்துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றார். இப்படி பல ஜாதகங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சூரியனும் குருவும் இணைகின்ற பொழுது ஏற்படும் யோகம் “சிவராஜ யோகம்’’ எனப்படுகிறது. அரசியலில் மிகப் பெரிய பதவியைக் கொடுத்து, புகழைத் தருவதாக இந்த யோகம் செயல்படும். சூரியன், சுக்கிரன், புதன் இது மூன்று முக்கூட்டுக் கிரகங்கள் என்பார்கள். எந்த ஜாதகத்திலும் இவைகள் ஒரே கட்டத்திலோ அடுத்தடுத்த கட்டடத்திலோ அதிகபட்சம் 90 பாகைக்குள் இருக்கும். அதனால் இந்த கிரகங்கள் பல நேரங்களில் அஸ்தங்க தோஷம் அடையும்.

அஸ்தங்க தோஷம் அடைந்த கிரகம் வலிமையற்று இருப்பதால், அந்த ஜாதகருக்கு அந்த கிரகத்தினால் ஏற்பட வேண்டிய சுப பலன்கள் ஏற்படாது. உதாரணமாக, புதன் அஸ்தங்க தோஷம் அடைந்தால் கூர்த்த மதியும் கல்வி அறிவும் இருக்காது. தடைப்படும். சுக்கிரன் அஸ்தங்க தோஷம் அடைந்தால், தாமதத் திருமணம் நடக்கும். 12 ராசிகளில் பெரும்பாலும் சூரியன் கடகம், துலாம், மகரம், கும்பம் ராசிகளில் இருக்கும் பொழுது பெரிய அளவு பலன்கள் கொடுப்பது இல்லை.

சூரியன் சுக்கிரன் வீடான ரிஷபராசியில் இருந்தால், ஜாதகருக்கு திருமணத் தடை ஏற்படுகிறது. இளமையிலேயே திருமணம் நடந்தால் தாரதோஷம் ஏற்படுகிறது. பொதுவாகவே சூரியன் கேந்திர திரிகோணங்களில் அமையாமல் 3,6,10,11 ஆகிய உப ஜெய ஸ்தானங்களில் அமைந்துவிட்டால் அவர் ஏற்றத்தைப் பெறுகின்றார்.

இரண்டாம் இடத்தில் சூரியன் இருக்கும்போது கண்களில் நோயும் (ராகு கேது சனி இருந்தால் உறுதி) ஐந்தில் அமையும்போது புத்திர தோஷமும், பெண்களாக இருந்தால் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகளும், ஏழில் இருக்கும் போது களத்திர தோஷமும், ஒன்பதில் தந்தைக்கு கண்டமும், 12-ல் இருக்கும்போது வீண் வம்புகளும் தருகின்றது.

சூரியனும் புதனும் இணைய புத ஆதித்ய யோகம் என்று சொல்வார்கள். எல்லா ஜாதகங்களிலும் செயல்படுவதில்லை. காரணம் இந்த யோகம் பங்கப்படாமல் இருக்க வேண்டும். அஸ்தங்க தோஷம் இல்லாமல் புதன் அமைந்திருக்க வேண்டும். சூரியன் ராகுவோடு இணைந்து இருப்பது கிரகண தோஷம். இது தொழில் ஸ்தானத்தில் அமைந்தால், தகாத வழிகளில் வருமானமும், அதனால் வழக்குகளும் வரும்.

சூரியன், சனி இணைவது பெரும்பாலும் தந்தைக்கும் மகனுக்குமான உறவைக் கெடுத்து விடுகிறது. சுப பார்வையால் தோஷம் நிவர்த்தி செய்யப்பட்டால் மட்டும் இந்த தோஷத்தில் இருந்து தப்பித்து விடலாம். செவ்வாயும் சூரியனும் இணைகின்ற பொழுது அதிகாரமும் கம்பீரமும் இருக்கும். ஆனால், முன்கோபம் மிக அதிகமாகும். காரணம் இரண்டும் உஷ்ண கிரகங்கள். அதுவும் லக்னத்திலோ வாக்கு ஸ்தானத்திலோ அமைந்துவிட்டால் சொல்லவே வேண்டியதில்லை. கஷ்டம்தான்.

தொகுப்பு: பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED இயற்கை வடித்த லிங்கம்