×

ராமாயணம் காட்டும் வாழ்வியல் தத்துவம்!

ராமாயணம் வெறும் காவியம் அல்ல. அது ஒரு வாழ்வியல் தத்துவம். அதை உணராமலேயே நாம் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் அல்லது மிக மோசமாக விமர்சனம் செய்கின்றோம். இவை இரண்டும் தவறுதான். ஒரு பொருளோ, உறவோ எதுவாக இருந்தாலும், அதன் மீது அதிகமாக பற்றுக் கொண்டு இருப்பதோ, அல்லது வரைமுறை இல்லாமல் வெறுப்பதோ நமக்கு நன்மையைத் தராது. ஒரு பொருளின் மீது வைக்கக்கூடிய அதிக பற்றும், அதிக வெறுப்பும், நம்மை இயல்பாக இருக்க விடாது.

தசரதன் ராமனை, ‘‘நீ ஆட்சி செய்ய வேண்டும்’’ என்று சொன்னபொழுது, ராமன் சொல்லிய பதிலால் இந்த உண்மை நமக்குப் புரிகிறது. தசரதனின் விருப்பம், ராமனுக்கு முடிசூட்டுவது. மக்களின் விருப்பம் ராமனுக்கு முடி சூட்டுவது.ஆள்பவனின் விருப்பமும், ஆளப் படும் மக்களின் விருப்பமும் ஒன்றாக இருக்கும் முடியாட்சி, குடியாட்சிக்கு இணையாக, மக்களாட்சியாக இருந்தது. தசரதன், ராமனுக்கு அரசாட்சியைக் கொடுக்கிறான். மக்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். இதெல்லாம் சரி, ராமன் என்ன மனநிலையில் இருக்கின்றான்? அவன் இதை ஏற்றுக் கொள்கிறானா? நிராகரிக்கின்றானா என்பதையும் பார்க்க வேண்டும் அல்லவா.

ராமனை அழைத்து வர ஆள் அனுப்புகிறான் தசரதன். இங்கே ஒரு நுட்பமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். ராமன், பெற்ற தந்தையான தசரதனைப் பிரிந்தான். பெற்ற தாயான கோசலையைப் பிரிந்தான். வளர்த்த தாயான கைகேயியைப் பிரிந்தான். அன்புக்குரிய தம்பிகளான பரதனையும், சத்ருக்கனனையும் பிரிந்தான். ஏன், வாழ்க்கை முழுக்க தன் கை பிடித்து, தன்னோடு நடந்த, மனைவியான சீதையையும் கொஞ்ச நாள் பிரிந்தான். ஆனால், தன்னோடு உடன் பிறந்த லட்சுமணனை அவன் பிரிந்ததே இல்லை. இதை ராமாயணம் முழுக்க பார்க்கலாம்.

காரணம், லட்சுமணனை என்றும் பிரியா நிரந்தர உறவான ஆதிசேஷ அம்சமாக வைணவத்தில் சொல்லுவார்கள். இப்போது, ராமன் லட்சுமணனோடு அரசவைக்கு வருகின்றான். தன்னை ஏன் அரசன் அழைக்கின்றான்? தனக்கு ராஜ்யாபிஷேகம் செய்வதற்கு அரசன் முடிவெடுத்திருக்கிறான். அதற்காகத்தான் அழைக்கிறான் என்கின்ற செய்தி எல்லாம் ராமனுக்குத் தெரியாது. அவன் ஏதோ தந்தை அழைக்கிறார் என்று அரசவைக்கு வருகின்றான்.

வந்தவுடனே தசரதன் அவனிடம் தனக்கு மிகவும் உடல்நிலை தளர்ந்துவிட்டது; தான் தவம் செய்யப்போவதாகவும், எனவே இதுவரை தான் சுமந்த அரசாட்சியை, தன்னுடைய பாரத்தை குறைப்பதற்காக, ராமன் சுமக்க வேண்டும் என்று சொல்ல, ராமன் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டான்.வந்த மைந்தனைத் தழுவிய தயரதன், ‘மறுக்காத மகனைப் பெற்ற தந்தை எவனோ அவனே துன்பம் இல்லாதவன்’ (‘சொல்மறா மகற்பெற்றவர் அருந்துயர் துறந்தார்’) என்று ஒரு நீதியைக் கூறிவிட்டு, நீ முடிபுனைந்து நல்லறஞ் செய்க, எனக்கு நீ செய்ய வேண்டிய கடன் இது என்று வேண்டுகிறான். என்ன மனநிலையில் ராமன் ஏற்றுக்கொண்டான் என்பதை கம்பன் மிக அழகாகக் காட்டுகின்றார்.

“தாதை அப்பரிசு உரை செயத் தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன்; இகழ்ந்தினன்; கடன் இது
என்று உணர்ந்தும் ‘‘யாது கொற்றவன்
ஏவியது அது செயலன்றோ?’’
நீதி இயக்கு என நினைத்தும் அப்பணி
தலைநின்றான்’’

தந்தை தசரதன், ‘‘ஆட்சியை ஏற்றுக் கொள்’’ என்று ராமனிடம் சொன்னவுடன், ராமன் அரசாட்சியில் ஆசை கொள்ளவும் இல்லை; அரசாட்சியை வெறுக்கவும் இல்லை. அரசாட்சியை மேற்கொள்வது தன்னுடைய கடமை என நினைத்தான். அரசன் நன்கு ஆராய்ச்சி செய்து, தனக்கு இந்தச் செயலைச் செய்யும்படியாக சொல்லியிருக்கும்பொழுது, அதை ஏற்றுக் கொள்வதுதான் நீதி என்று நினைத்து, தந்தையின் கருத்துக்கு உடன்பட்டான் என்பது பாட்டின் பொருள். எத்தனை அற்புதம் பாருங்கள்!‘‘ஆஹா அரசாட்சி கிடைத்துவிட்டது’’ என்று எதிர்பார்த்துத் துள்ளிக் குதிக்கவும் இல்லை. ‘‘இந்த அரசாட்சியை யார் ஏற்றுக் கொள்வார்கள், இது என்ன பெரிய தலைவலி’’ என்று அதனை இகழவும் இல்லை. இப்பொழுது ராமன் மனநிலை எப்படி இருக்கிறது?‘‘அரசன் இந்தக் காரியத்தைச் சொல்லுகின்றான். நாம் செய்ய வேண்டும்’’ என்று நினைத்து மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுகின்றான். இப்படி அவன் ஆசைப்படாமலும், இகழாமலும் சமமாகக் கருதி ஏற்றுக்கொள்ளும் பக்குவமான மனநிலையில் இருந்ததால்தான், பின்னால் ‘‘உனக்கு ராஜ்ஜியம் இல்லை; நீ 14 வருஷம் காட்டுக்குப் போ’’ என்று சொல்லும்பொழுதும் வருத்தப்படாமல் இருந்தான். பகவத் கீதையில் ஒரு ஸ்லோகம்.

யம் ஹி ந வ்யத யந்த்யேதே புருஷம்
புருஷர்ஷப
ஸம துக்க ஸுகம் தீரம் ஸோம் அருதத்
வாய கல்பதே

புருஷர்களுள் சிறந்தவனே, சுக துக்கங்களை சமமாக எண்ணுபவனாய், தைரியம் உடையவனாக எந்தப் புருஷன் புலன்கள் மற்றும் போகங்களின் சேர்க்கைகளால் கலங்காமல் இருக்கிறானோ, அந்த மனிதனே மோட்சத்தை அடைய வல்லவனாவான். மோட்சத்தை அடைபவனுக்கே இப்படி சொல்லப்பட்டது என்றால், மோட்சத்தைக் கொடுப்பவன் (ராமன்) எப்படி இருப்பான். அப்படி ஒரு வீரனாக ராமன் இருந்தான்.
ஒரு விஷயத்தை ஆசையோடு பற்றும் போது சுகம் கிடைக்கும். அது தற்காலிக சுகம். காரணம், பற்றுகின்ற பொருளும் நிலையற்றதுதான். அப்படி ஆசையோடு பற்றிய விஷயம், தம்மை விட்டுப் போகும்பொழுது அதே பொருளால் தமக்குத் துக்கமும் உண்டாகும். ஒரு பொருளினால் தமக்கு
சுகமும், அதே பொருளினால் துக்கமும் உண்டாவதால், அந்தப் பொருளை இயல்பாகக் கருதுவதுதான் பக்குவம். அந்தப் பக்குவம்தான் ராமனிடம் இருந்தது. ஒரு காரியத்தில் அதீத பற்றோ, அதீத வெறுப்போ கூடாது என்பதற்கு ராமனின் இந்த நடத்தை உதாரணம்.

தேஜஸ்வி

The post ராமாயணம் காட்டும் வாழ்வியல் தத்துவம்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?