×

ரைடர்ஸ் Vs ராயல்ஸ்: ஈடன் கார்டனில் இன்று 1 மற்றும் 2 மோதல்

கொல்கத்தா: ஐபிஎல் 17வது சீசனின் 31வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதும் இப்போட்டி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் 6 போட்டியில் 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. சஞ்சு, ஜெய்ஸ்வால், பராக், ஜுரெல், ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்துவது, கேகேஆர் பவுலர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

போல்ட், ஆவேஷ், சென் வேகமும், சாஹல் – மகராஜ் சுழல் கூட்டணியின் துல்லிய தாக்குதலும் கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. அதே சமயம், ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணி முதல் 3 ஆட்டங்களில் ஐதராபாத், பெங்களூரு, டெல்லி அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி உற்சாகத்தில் இருந்தது. 4வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையிடம் தோல்வியை தழுவினாலும், அதில் இருந்து மீண்ட கொல்கத்தா நேற்று முன்தினம் லக்னோவை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

தொடக்க வீரர்கள் சால்ட், நரைன் அதிரடி கேகேஆர் அணிக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. ஷ்ரேயாஸ், வெங்கடேஷ், ரஸ்ஸல், ரகுவன்ஷி என நீளும் பேட்டிங் வரிசை தொடர்ச்சியான அதிரடிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. பந்துவீச்சிலும் ஸ்டார்க், நரைன், வருண், ரஸ்ஸல் நம்பிக்கை அளிக்கின்றனர். 6வது வெற்றிக்காக ராயல்சும், 5வது வெற்றிக்காக ரைடர்சும் வரிந்துகட்டுவதால்… சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

The post ரைடர்ஸ் Vs ராயல்ஸ்: ஈடன் கார்டனில் இன்று 1 மற்றும் 2 மோதல் appeared first on Dinakaran.

Tags : Raiders ,Royals ,Eden Gardens ,Kolkata ,IPL 17th season ,Kolkata Knight Riders ,Rajasthan Royals ,Dinakaran ,
× RELATED எலிமினேட்டரில் இன்று ‘ராயல்ஸ்’ பலப்பரீட்சை: வெற்றி அல்லது வெளியேற்றம்