×

இயற்கையில் விளைந்த வேளாண்மை பொருட்களே எங்கள் மூலப்பொருட்கள்!

நன்றி குங்குமம் தோழி

உடல் ஆரோக்கியத்திற்காக நாம் உண்ணும் பல உணவுகளில் ரசாயனங்கள் பயன்படுத்தி தயாரிக்கும் உணவுப் பொருட்கள் கலப்பதால், அவை நம் உடல் நலனிற்கு மிகுந்த கேடு விளைவிப்பவையாக மாறிவிடுகிறது. இதனை தவிர்த்து இயற்கையாக ஆர்கானிக் முறையில் விளைந்த பொருட்களை பயன்படுத்துவதால் அவை நமது உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை விளைவிக்கும். அம்மாதிரியான ஆர்கானிக் பொருட்களை உபயோகித்து தரமான மசாலா பொடி வகைகள், கீரை சாதப் பொடி வகைகள் மற்றும் சூப் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ‘இனியா ஆர்கானிக்’ பெயரில் கடையினை நிர்வகித்து வரும் சுதா.

ஆர்கானிக் பொடி வகைகள்…

நான் தாவரவியலில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்திருக்கேன். படிப்பு முடிந்ததும், பி.எட் பயிற்சி எடுத்து மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவு குறித்த அவசியத்தை சிறுவயதிலேயே உணர்த்தி வருகிறேன். என் பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மேல் கவனம் கொள்ளும் போது என் குழந்தைகளுக்கும் ஆரோக்கிய உணவுகளை கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.

எங்கள் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த மாதிரியான உணவாகவும் இருக்கணும் அதே சமயம் சத்தானதாகவும் இருக்க வேண்டும் என விரும்பினோம். குழந்தைகளுக்கு கெமிக்கல் இல்லாத உணவைக் கொடுக்கணும்கிற எண்ணம்தான் இனியா ஆர்கானிக்ஸ் என்கிற நிறுவனத்தை ஆரம்பிக்க முதல் விதை விழுந்தது எனலாம். முதலில் எங்களது நண்பர்கள், தெரிந்தவர்கள் என எங்கள் ஆர்கானிக் தயாரிப்புகளை அளித்தோம். அதன் சுவை மற்றும் தரத்தின் காரணமாக அவர்களின் வாய்மொழி விளம்பரத்தால் பல்வேறு புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அப்படித்தான் இனியா ஆர்கானிக் உருவாகியது. தற்போது பல ஆர்கானிக் கடைகளுக்கு எங்கள் தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது எங்களது உழைப்பிற்குக் கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரம் எனலாம்.

இதற்கான சிறப்புப் பயிற்சி…

ஆமாம். தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் உத்தமசோழபுரத்தில் நடத்திய உணவு பதப்படுத்துதல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அங்கு தான் ஆர்கானிக் முறையில் பல வகை பொடிகள் எவ்வாறு தயாரிக்கலாம்னு தெரிந்து கொண்டேன். வேளாண் கல்லூரி பேராசிரியர்களின் பயிற்சி வகுப்புகள், மதிப்புக்கூட்டுதல் செய்து வெற்றி பெற்றவர்களின் கதைகள், மாதிரி விவசாய பண்ணை பார்வையிடுதல், உணவுப் பாதுகாப்பு தர நிலைகள் பயிற்சி, களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கலந்துரையாடல் என பல விஷயங்களை நான் அங்கு கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. வேளாண் பயிற்சி மைய இயக்குனர்களின் வழிகாட்டுதல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்தந்த மாவட்ட தொழில் மையம் மூலம் இது போன்ற பயிற்சி வகுப்புகள் குறித்து அறிந்து கொள்ள முடியும். மாதந்தோறும் மூன்று அல்லது நான்கு பயிற்சிகளை இவர்கள் நடத்துகின்றனர்.

உங்களது ஆர்கானிக் பொருட்களின் தனிச்சிறப்பு…

ஆர்கானிக் என்றால் இயற்கையானது என்று பொருள். இன்று ஆர்கானிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெருமளவில் உள்ளது. தற்போது எல்லாம் மக்கள் தேடி தேடிச் சென்று ஆர்கானிக் பொருட்களை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆர்கானிக் கடைகளில் பெரும்பாலும் இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்கள்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்போது மக்களுக்கு ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்.

அதே சமயம் அவை இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதனால் தான் நாங்க பொடி வகைகளை அறிமுகம் செய்தோம். குறிப்பாக குழந்தைகளுக்கு கீரை என்று சொன்னாலே ஒருவித வெறுப்பு வரும். அதையே மதிப்புக்கூட்டல் பொருளாக மாற்றிக் கொடுத்தால் அவர்கள் எளிதில் சாப்பிடுவார்கள் என்பதால்தான் நாங்கள் கீரையில் பல பொடி வகைகளைஅறிமுகம் செய்தோம். கீரை சாதப் பொடிகள், கீரை இட்லிப் பொடிகள், உடனடி இட்லிப் பொடிகள் எங்களோட சிறப்பு தயாரிப்புகள் என்று சொல்லலாம். சமையலுக்கான மசாலாப் பொடிகளும் செய்கிறோம். இயற்கை முறை வேளாண்மை செய்பவர்களிடம் மூலப்பொருட்கள் வாங்கிதான் பயன்படுத்தி வருகிறோம்.

அதனால் நல்ல உணவுப் பொருட்களை கொடுக்கிறோம் என்கிற மகிழ்ச்சி. எங்கள் பொருட்களின் சிறப்பு என்று சொல்லணும்னா கீரைப் பொடிகள் அனைத்தும் சாதம் மட்டுமில்லாமல் இட்லி தோசையுடனும் சேர்த்து சாப்பிடலாம். சீக்கிரம் சமையல் செய்து முடிக்க ஏதுவாக இருப்பதோடு, நேர சிக்கனம், சத்தான உணவு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கிறோம் என்கிற திருப்தி கிடைக்கும். எங்களின் உணவுப் பொருட்களை எங்க சமூக வலைத்தளத்தில் வாங்கலாம். கோவை, திருப்பூர், மதுரை, சென்னை போன்ற நகரங்களில் உள்ள ஆர்கானிக் கடைகளில் எங்கள் பொருட்கள் கிடைக்கின்றது. நண்பர்கள், உறவினர்கள் என நேரடி வாடிக்கையாளர்களும் அதிகம். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள்

ஏன் ஆர்கானிக் பொருட்கள்…

கெமிக்கல், ப்ரீசர்வேடிவ் ரசாயன உரங்கள் இல்லாத உணவுப் பொருட்கள் நம்ம ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குழந்தைகளுக்கு கண்ணைப் பறிக்கும் நிறமூட்டிகள் சேர்த்த உணவுகளும், துரித உணவுகளும் கொடுக்காமல் இயற்கை முறையில் விளைந்த உணவுகளை கொஞ்சம் சுவையாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மொத்தத்தில் நமது ஆரோக்கியம் மேம்படும்.

எதிர்காலத் திட்டம்…..

எங்களின் ஆர்கானிக் தயாரிப்பு பொருட்களை மேலும் பலருக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். தற்போது இரண்டு பெண்கள் எங்களிடம் வேலைக்கு வருகிறார்கள். மேலும் பல பெண்களுக்கு இந்த கிராமத்து சூழல்லேயே நல்ல வேலைவாய்ப்பு அமைத்துக் கொடுக்கணும் என்பது எனது பெரும் ஆசை.

பெண் தொழில்முனைவோருக்கு உங்களின் ஆலோசனை…

உங்களுக்கு பிடித்த துறையில சின்ன அளவில் வேலை செய்து பாருங்கள். அந்த துறையில் நிபுணத்துவம் பெற தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொள்வது அவசியம்.
அது உங்களுக்கு பிடிச்சதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் மக்களுக்கு நல்ல பொருட்கள் அல்லது சேவையை வழங்குவதாகவும் மாறும். பெண்கள் துணிந்து தங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து அதில் முயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்றார் சுதா.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post இயற்கையில் விளைந்த வேளாண்மை பொருட்களே எங்கள் மூலப்பொருட்கள்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED தர்பூசணியின் நன்மைகள்!