×

உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

கொண்டாட்டங்களும், குதூகலங்களும்!

இந்திய கலாச்சாரம் பலவிதமான பண்டிகைகள் மூலம் குடும்பப் பாசத்தையும், உறவின் நெருக்கத்தையும் நமக்குள்ளே ஏற்படுத்தி அன்புப் பாலத்தை உருவாக்குகிறது. பெரும்பாலான பண்டிகைகள் நம் உறவு முறைகளை பலப்படுத்தும் விதமாக அமைகிறது. மேற்கத்திய நாடுகளில், பிறந்த நாளை பெரிய விழாவாகக் கொண்டாடுவர். உறவுகள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துத் தெரிவிக்க வருவர். பிறந்த நாள், திருமண நாள் போன்றவை வார தினங்களில் அமைந்துவிட்டால், அந்த வார சனி-ஞாயிறுகளில் அதனை கொண்டாடுவார்கள்.

பெண்கள் தினம், தாய்-தந்தையர் தினம் கொண்டாட்டமும் இருக்கும். இங்கு அப்படியில்லை, வருடம் முழுவதுமே கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். வருடப்பிறப்பு முதல் இருந்தே உறவினர்கள் வாழ்த்துதலும், புதுமையான சாப்பாட்டு அயிட்டங்களை செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்தலும் ஆரம்பமாகி விடுகிறது. ‘ஆடி’ மாதம் என்று எடுத்துக்கொண்டால், புது மாப்பிள்ளை பெண்வீட்டிற்கு விருந்திற்கு செல்வதும், அவர்கள் ஒரு மாதம் தனித்து இருப்பதும், இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஏதோ ஒரு சில காரணங்களுக்காக நம் ெபரியோர்கள் இதெல்லாம் ஆராய்ந்து வைத்துள்ளார்கள். திருமணமான ஒரு வருடத்தில் முதல் ஆடி, தலை தீபாவளி, பொங்கல் என அனைத்தும் உறவுகளுடன் குதூகலிக்கவும், மன மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகின்றன. வசதிகள் இல்லாத குடும்பங்களிலும், அனைத்து விசேஷங்களையும் கொண்டாட தவறுவதில்லை. ஆனால், இன்று எல்லோருடைய வீடுகளிலும் குடும்பத்திற்குத் தேவையான அனைத்தும் காணப்படுகின்றன. உறவினர்கள் இருந்தாலும், கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கி றதா என்பதுதான் கேள்விக்குறி.

தமிழர் வழக்கத்தில், பெண் திருமணமாகி வேறு வீட்டுக்குச் சென்று விட்டாலும், பண்டிகைகளுக்கு அம்மா வீட்டில் இருந்து சீர் தருவது என்பது பெருமையான விஷயமாகக் கருதப்பட்டது. எவ்வளவு வசதி இருந்தாலும், பெண்களுக்கு தாய் வீட்டிலிருந்து வரும் சிறிய தின்பண்டம் போதும். தாய், தந்தையருக்கு அடுத்து, உடன் பிறந்த அண்ணனோ, தம்பியோ அந்த கௌரவத்தை தர பொறுப்பாகின்றனர். தாய், மாமனாக இருந்தால் சிறப்பு கௌரவம். சகோதரியின் குழந்தைக்கு, காது குத்தி மொட்டை போடுவது முதல் திருமணம் வரை ‘மாமா’ உறவிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சடங்குகள் யார் மூலம் செய்யப்படுகிறதோ, அதை வைத்தே அவர்களின் உறவை கண்டு பிடிக்கலாம்.

மாட்டுப் பொங்கலன்று பெண்கள் ‘கனு’ வைத்து உடன் பிறந்தவர்கள் சுபிட்சமாக வாழ வேண்டுமென வேண்டுவார்கள். சிலர் காவிரிக் கரையிலும் பூஜிப்பர். ‘ரக்‌ஷா பந்தன்’ என்னும் பண்டிகை சகோதர, சகோதரி உறவுமுறையை பலப்படுத்துவதாக அமைகிறது. உடன் பிறந்த அண்ணனோ, தம்பியோ இல்லை யென்றால் யாரை உடன் பிறந்தவராகக் கருதுகிறோமோ, அவருக்கு அப்பெண் ‘மஞ்சள் கயிறு’ மணிக்கட்டில் அணிவித்து உறவை பலப்படுத்திக் கொள்வாள். இதுதான் ‘ராக்கி’ என்பது. இதன் மூலம் அப்பெண்ணின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் அந்தப் பையன் பொறுப்பேற்பார். பதிலுக்கு ‘ராக்கி’ கட்டிய சகோதரிக்கு நல்ல பரிசுகளைத் தருவதுண்டு. இப்படி சகோதர, சகோதரி உறவுகளை முன்நிறுத்தி, பாசத்தை பலவிதத்தில் காட்ட வைக்க பண்டிகைகள் உள்ளன.

திருமணம் ஆன தம்பதி மன ஒற்றுமையுடன் நீடூழி வாழ வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவோம். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் புகுந்து, குழப்பங்களைச் செய்து, மன வருத்தத்தை ஒருபோதும் ஏற்படுத்தக்கூடாது. நம் பெண் பிறர் வீட்டுக்குச் செல்லும் பொழுது, நலமாக வாழவேண்டும், அவள் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே காணப்பட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அதே போல் நம் வீட்டிற்கு வரும் பெண்ணிடம் நாம் எவ்வளவு அன்பைத் தந்து அனுசரிக்கிறோமோ, அதே பலன் நமக்கு திரும்பக் கிடைக்கும்.

அதனால்தானோ என்னவோ இன்றைய திருமண முறைகளும் அவரவர்களின் தனிப்பட்ட விருப்பப்படி நிறைவேற்றப்படுகின்றன. கூட்டுக் குடும்ப முறைகள் மாறிவிட்டாலும், உறவுகள் அவ்வப்ெபாழுதாவது வந்து போய்க் கொண்டிருந்தால்தான், நம் அடுத்த சந்ததிக்கு உறவுகளின் மகத்துவம், பாசபந்தம் புரியும். உறவுகளுடன் கூடிக் கொஞ்சி வளர்ந்த நம் இளம் தலைமுறையினரே இன்று பல்வேறு நாடுகளில், தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்பொழுதோ சில வருடங்களுக்கு ஒருமுறை வரும்பொழுது உறவுகளை சந்திக்க நேரிடுகிறது. அப்பொழுது அவர்கள் பிள்ளைகளுக்கு, இவர்களெல்லாம் நமது உறவு என்று அறிமுகப்படுத்தும் சூழல் ஏற்படுகிறது. வெவ்வேறு சூழலில் வளரும் குழந்தைகளுக்கு நம் உறவுகளுடன் நெருங்கி பழக வாய்ப்பில்லாமல் அமைந்து விடுகிறது. தாத்தா- பாட்டியுடன் அன்பில் திளைத்த காலங்கள் காணாமல் போய் விட்டன. பெற்றோருக்கே பிள்ளைகளுடன் பேசிப்பழக நேரமில்லை. அன்பில்லா சூழலில், ஆடம்பர வாழ்க்கை மட்டும் கிடைத்துள்ளது.

வீட்டில் ஒரு தாய் இல்லை என்றால், பலர் அந்த இடத்தை நிரப்ப ஆதிக்கம் காட்ட முன் வருவார்கள். அப்பா-அம்மா அன்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது. அவர்கள் பிள்ளைகளுக்கு நல்லதை மட்டுமே செய்வார்கள். அவர்களின் தியாகத்திற்கு ஈடு இணையே கிடையாது. பிள்ளைகளுக்கு படிப்பறிவு இல்லாவிட்டாலும், அவர்களுக்கு பட்டறிவைத்தந்து சொத்தாக நினைப்பவர்கள். எல்லாப் பிள்ளைகளும், மருமகள்களும் அம்மாவுக்கு ஒன்றுதான்.

விட்டுக் கொடுக்காமல் வீட்டில் நடைபெறும் விஷயங்களைக் கட்டிக்காத்து குடும்ப கௌரவத்தை குறையாமல் பார்த்துக் கொள்வதில் அம்மாவுக்கு நிகர் அம்மாதான். மாமியாரும் ஒரு தாய்தான் என்பதால் அவசியம் தன் பிள்ளைகள், மருமகள்களை விட்டுக் கொடுக்க மாட்டாள். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. அன்றைய காலகட்டத்தில், ஒரு சில பெண்கள்தான் வேலைக்குச் செல்வதையும் மற்றவர்கள் ேபசினார்கள்.

காலங்கள் மாறும் என்ற அந்த நம்பிக்கை இன்று பொய்க்கவில்லை. இன்றைய காலம் குடும்பத்தின் அனைத்துப் பெண்களுமே, ஏதாவது ஒரு வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். அவரவர் குடும்பம், வேலை என்று தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டுள்ளார்கள். சமூக வலைத்தளங்கள் வந்தபின் உறவினர் வீடுகளுக்கு நேரில் சென்று பார்ப்பதும், வாழ்த்துவதும் மிகவும் குறைந்துவிட்டன. பிள்ளைகள் பல்வேறு துறைகளில் சாதிப்பதற்காக போராடுகிறார்கள். இதனாலேயே அவர்களுக்கு உறவினர் வீட்டுக்குச் செல்லும் வழக்கம் அமைய நேரமே கிடைப்பதில்லை. நாம் அனுபவித்த கொண்டாட்டங்களும், குதூகலங்களும் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டியுள்ளது.

(உறவுகள் தொடரும்!)

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

The post உன்னத உறவுகள் appeared first on Dinakaran.

Tags : kumkum ,Western ,
× RELATED வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!