×

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

திருச்சி, ஏப்.15: சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாகும். சித்திரை முதல் நாள் வசந்த காலத்தின் ஆரம்பமாக கருதப்படுவதால் இந்த நாளை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் சித்திரை விஷூவாகவும் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் சித்திரை மாத பிறப்பான தமிழ் புத்தாண்டு நேற்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் நேற்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடந்தது. நாகை நீலாயதாட்சியம்மன் கோயில், சிக்கல் சிங்காரவேலவர் கோயில்களில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். அதேபோல் எட்டுக்குடி முருகன் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் தியாகராஜர் கோயில், பழனியாண்டவர் கோயில், மன்னார்குடி ராஜாகோபால சுவாமி கோயில், மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோயில், புனீஸ்வரர் கோயில், திருக்கடையூர் அமிர்தகடேஷ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு, அபிஷேக ஆராதனை நடந்தது.
தஞ்சை பெரிய கோயில், சுவாமிமலை முருகன் கோயில்களில் நேற்று அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், திருவையாறு ஐயாரப்பர் கோயில், பாபநாசம் ஐராவதீஸ்வரர் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

இதேபோல் கரூர் பசுபதீஸ்வரர் கோயில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண பெருமாள் கோயில், கரூர் மாரியம்மன் கோயில், மேட்டுத்திட்டு பெருமாள் கோயில்கள் மற்றும் புதுக்கோட்ைட திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில், விராலிமலை முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் வாரத்தின் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடை திறக்கப்படும். ஆனால் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதேபோல் வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் கோயில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோயில், பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில், பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதேபோல் அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருச்சி மாவட்டத்தில் ரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை தாயுமானவர் கோயில், வயலூர் முருகன் கோயில், திருவானைக்காவல் ஜம்புவேஸ்வரர் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோயில், கோர்ட் அருகே உள்ள ஐயப்பன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வழிபாடு நடந்தது. தமிழ் புத்தாண்டையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் வழிபாடு நடத்தி விட்டு குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர். இதனால் அனைத்து கோயில்களிலும் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

பேட்டவாய்த்தலை தேவஸ்தானம் பாலாம்பிகை உடனுறை மத்தியார்ஜூனேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அமபாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அஸ்த்திரதேவர் தீர்த்வாரிக்கு பல்லக்கில் புறப்பட்டு கரும்பாயி அம்மன் கோயிலை அடைந்து அங்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காவிரி ஆற்றில் அஸ்த்திரத் தேவர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவஸ்தானம், பேட்டவாய்த்தலை, ஆரியம்பட்டி, பழையூர்மேடு, பழங்காவேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Tamil New Year ,Trichy ,Chitrai ,Chitra ,Vishu ,Kerala ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...