×

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்

நாமக்கல், ஏப்.15: நாமக்கல் மாவட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி, திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில், மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல், ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்காக, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, பரமத்தி வேலூர், சேந்தமங்கலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில், 1661 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கான 3 கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தும் வகையில், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு 116 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில், அசம்பாவிதம் எதுவும் நிகழாத வண்ணம், பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள், திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால், வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகளை நேற்று, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க தனித்தனியாக பாதுகாப்பு அறை, ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், வாக்கு எண்ணும் அறை, வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள், சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள், செய்தியாளர்களுக்கான அறை, முகவர்கள் மற்றும் போலீசாருக்கான சிசிடிவி அறை, உள்ளே வருவதற்கு மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள், குடிநீர், கழிப்பறை, மின்சார மற்றும் இணையதளம் உள்ளிட்ட வசதிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, டிஎஸ்பி இமயவரம்பன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தவமணி, துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Tiruchengode ,Tamil Nadu ,
× RELATED நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியை சுற்றி Drone-கள் பறக்க தடை