×

வனப்பகுதியில் விட முயன்றபோது பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் சாவு

பண்ருட்டி, ஏப். 14: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் அப்துல் சமத் மகன் உமர் அலி(36). இவரது மனைவி பர்ஹத் நிஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தன்னார்வலரான உமர் அலி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதிகளில் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பண்ருட்டி முத்தையா நகரில், தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பு ஒன்றை பிடித்து, பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது பற்றி அறிந்த உமர்அலி, அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காக தீயணைப்பு நிலையத்திற்கு சென்றார்.

பின்னர் அங்கு ஒரு பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாம்பை, அவர் வேறொரு பாட்டிலுக்கு மாற்ற முயன்றதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக பாம்பு உமர் அலியை கடித்துள்ளது. இதை பார்த்து தீயணைப்பு நிலைய வீரர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உமர்அலி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு பிடி வீரர், பாம்பு கடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post வனப்பகுதியில் விட முயன்றபோது பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் சாவு appeared first on Dinakaran.

Tags : Panruti ,Umar Ali ,Abdul Samad ,Nellikuppam Pudutheru, Cuddalore district ,Parhat Nisha ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு