×

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அஸ்திவாரம் பணி தற்காலிக நிறுத்தம்

வடலூர், ஏப். 13: வடலூர் வள்ளலார் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க அஸ்திவாரம் நடைபெறும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதனிடையே தேர்தல் வாக்குறுதியின்படி வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் ரூ.100 கோடியில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் 17ம்தேதி நடைபெற்றது.

இந்நிலையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அஸ்திவாரம் தோண்டப்பட்டு கடந்த சில நாட்களாக பணிகள் நடந்தது. கடந்த 8ம் தேதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த 161 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வள்ளலார் தெய்வநிலைய செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் கொடுத்த புகாரின்பேரில் பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்திய 20 பேர் மீதும் போராட்டத்தில் ஈடுபட்ட 141 பேர் மீது வடலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த 11ம்தேதி வள்ளலார் பணியகம்- தெய்வத்தமிழ் பேரவை சார்பில் வள்ளலார் பெருவெளியில் சர்வதேச மைய கட்டப்படுவதை கைவிட வேண்டுமென கூறி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் 30 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் வருகிற 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருப்பதால் தற்காலிகமாக சர்வதேச மையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் பகுதியில் சில வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

The post வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அஸ்திவாரம் பணி தற்காலிக நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Vallalar International Centre ,Vadalur ,Vallalar ,Taipusa Jyoti darshan ,Satya Gnana Sabha ,Vadalur, Cuddalore district ,
× RELATED வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய...