×

அந்த நாளும் வந்திடாதோ…

நன்றி குங்குமம் தோழி

‘‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
ஏன் ஏன் நண்பனே…
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே..?”

இந்தப் பாடலைக் கேட்கும் அனைவரின் மனமும் கண்டிப்பாக நம்முடைய பழங்கால நாட்களுக்கு அழைத்துச் செல்லும். வேண்டுவதைத் தேட ‘கூகுள்’, ‘இன்டர்நெட்’ என்று பலவும் இருந்தும், பழைய நாட்களில் நடைபெற்ற சந்தோஷமான தருணங்களாக இருந்தாலும் சரி, மனதை காயப்படுத்தும் நிகழ்வுகளாக இருந்தாலும், அவை அனைத்தும் இன்றைய தலைமுறையினர் தேடும் இணையத்தில் இருக்காது. எல்லாம் அவரவர் மனம் என்னும் சாதனத்தில் மட்டும்தான் பதிவாகி இருக்கும். அதில் இருந்து யாராலும் வெளியே கொண்டு வர முடியவே முடியாது. குறிப்பாக 50 வருடங்களுக்கு முந்தைய நாட்கள். பள்ளி செல்லும் காலம். செல்போன் என்றால் என்ன என்று தெரியாது.

வீட்டில் ஒரே ஒரு லேண்ட் லைன் தொலைபேசி மட்டும்தான் இருக்கும். அந்த போன் அடித்தால் சமையல் கட்டிலிருந்து ஹாலுக்கு ஓடி வர வேண்டும். அதாவது, சாப்பாட்டு ஹால், தொட்டி முற்றம், துளசி மாடம், தாவாரம், ஊஞ்சல் எல்லாவற்றையும் கடந்துதான் ஒலிக்கும் போனை எடுக்க வேண்டும். ஆனால் அந்த போன் ஒலிக்கும் போது அதை எடுக்க போட்டி போட்டிக் கொண்டு வீட்டில் இருப்பவர்கள் ஓடி வருவார்களே தவிர யாரும் அலுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அதேபோல் வெளியூருக்கு பேச வேண்டுமென்றால், 3 அல்லது 4 நிமிடங்கள் பேசுவதற்காக பொது தொலைபேசி மையத்தில் முன்கூட்டியே சொல்லி வைக்க வேண்டும். இன்று இருப்பது போல் நாம் நிற்பது, சமைப்பது, சாப்பிடுவது, வெளியே செல்வது என அனைத்தையும் பதிவு செய்ய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் போன்ற எந்த ஒரு தொழில்நுட்ப வசதிகளும் கிடையாது. மற்றவருக்கு செய்தி தெரிவிக்க வேண்டும் என்றால் இந்த ஒரே தொலைபேசி மூலமாகத்தான் சொல்ல வேண்டும்.

மேலும் எல்லோருடைய மனமும் திறந்த புத்தகம் மாதிரி இருக்கும். செல்போனை பூட்டி வைத்து ரகசியம் காப்பது போல் அன்று யாரிடமும் எந்த ரகசியமும் இருக்காது. யாராவது ஊருக்குப் போனால், அங்கு சேர்ந்தவுடன் ஒரு போன் வரும், அவ்வளவுதான். நிமிடத்துக்கு நிமிடம் போட்டோ சாட்சியுடன் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருந்தது இல்லை.

இன்றோ… கதைகள் சொல்லி குழந்தைகளுக்கு சாதம் ஊட்டின காலம் காணாமல் ேபாய்விட்டது. மாறாக செல்போனைப் பார்த்துக் கொண்டு குழந்தைகள் சாப்பிடுகிறார்கள். மொட்டை மாடியில் அம்மா கையால் சாதம் சாப்பிட்ட காலம் வின்னில் தவழும் மேகம் போல் கரைந்துவிட்டது. செல்போன் அல்லது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு வாய்க்குள் என்ன போகிறது என்று தெரியாமல்தான் நாம் உணவினை முழுங்கி வருகிறோம். இது குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்களுக்கும்தான். ஒன்றாய் அமர்ந்து சிரித்துப் பேசி சாப்பிட்ட நாட்கள் எங்கே? பக்கத்தில் இருக்கும் போனைப் பார்த்த வண்ணம் சாப்பிடும் கொடுமையான நாட்கள் இங்கே!

கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப் போகும் காலம் இது. அவர்கள் நேரில் பேசிக் கொள்வதைவிட செல்போனில் தான் அதிகம் சாட்டிங் செய்கிறார்கள். கணவரை வாய்விட்டு அழைக்கும் பழக்கமும் மறைந்துவிட்டது. ஒரே வீட்டில் இருந்தும், செல்போனில்தான் அவர்களை அழைத்து பேசுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி வரவேற்கப்பட வேண்டியதுதான். இன்று நம் அனைவரின் கையிலும் தவழும் செல்போன் அவசர கால கட்டத்திற்கு கை கொடுக்கிறது. அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது நம் சாமர்த்தியம். நேரமில்லை என்பவர்கள் ஒரு நாள் செல்போனை மறந்தால், நமக்கு எத்தனை நேரம் இருக்கிறது என்று தெரியும்!

ஒரு சின்ன சம்பவம்தான். தெரு வாசலில் சுவாமி ஊர்வலம் வந்தால், கைக்கூப்பி சுவாமியை தரிசிப்பதை மறந்துவிட்டு, உடனே போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் போடுவதும், அதற்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கு என்று பார்ப்பதும்தான் இன்றைய காலம். அந்த நாட்களில் பொழுதுபோகவில்லை, போர் அடிக்கிறது என்ற விவகாரமே கிடையாது. கதை புத்தகங்கள் படிப்பது, வானொலி கேட்பது, கன்றுக்குட்டிகளை கொஞ்சுவது, மாலை நேரம் நண்பர்களுடன் விளையாடுவதுதான் குழந்தைகளின் பொழுதுபோக்கு… இன்று நாம் எல்லோரும் ஏங்குவது அந்த நாட்களும் வந்திடாதோ என்பதைதான்.

தொகுப்பு: மாலா தியாகராஜன்

The post அந்த நாளும் வந்திடாதோ… appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED தர்பூசணியின் நன்மைகள்!