×

ஊட்டி வருகை தரும் சுற்றுலா பயணிகள் வசதிக்கு சர்க்கியூட் பேருந்து சேவை

ஊட்டி, ஏப். 11: ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் ‘சர்க்கியூட்’ பஸ் சேவை 14ம் தேதி முதல் துவக்கப்படவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாவரவியல் பூங்கா, சிறுவர் பூங்கா, தொட்டபெட்டா, முதுமலை சரணாலயம், படகு இல்லம் ஆகிய பகுதிகள் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது.

தற்போது 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசலும் ஏற்படுகிறது. அடுத்த மாதம் கோடை விழா துவங்கவுள்ள நிலையில், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ‘சர்க்கியூட்’ பஸ் சேவை வரும் 14ம் தேதி துவக்கப்படுகிறது. தற்போது வார விடமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரு பஸ்கள் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வரும் 14ம் தேதி முதல் வார நாட்களிலும் இரு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த பஸ் ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு சென்று வரும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. சர்க்கியூட் பஸ்களில் பெரியவர்களுக்கு ரூ.100ம் சிறியவர்களுக்கு ரூ.50ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பஸ்களில் செல்பவர்களுக்கு டிக்கெட்டிற்கு பதிலாக ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. இந்த பாஸ் வைத்துள்ள பயணிகள் சர்க்கியூட் பஸ்களில் பாசில் குறிப்பிட்டுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லாம்.

கடந்த ஆண்டை போல் இம்முறையும் தொட்டபெட்டா அருகேயுள்ள தேயிலை பூங்கா வரையில் இந்த பேருந்துகள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. துவக்கத்தில் இரு பஸ்கள் இயக்கப்படும். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து, சர்க்கியூட் பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், வரும் 14ம் தேதி முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து செல்ல முடியும்.

The post ஊட்டி வருகை தரும் சுற்றுலா பயணிகள் வசதிக்கு சர்க்கியூட் பேருந்து சேவை appeared first on Dinakaran.

Tags : Circuit-bus service ,Ooty ,Circuit Bus Service ,State Transport Committee ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...