×

சிறுகதை-என் உயிரிலே நீ கலந்தாய்…

நன்றி குங்குமம் தோழி

ஏஞ்சலும், டேவிட்டும் ஹனிமூன் போய்விட்டார்கள். வீட்டிலே விக்டரும், தாய் மேரியும் உதவிக்கு ஒரு பெண்மணி மூவர் மட்டும்தான். விக்டருக்கு தான் ரோஸியுடன் சிம்லாவுக்கு ஹனிமூன் போய்விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அங்கு குதிரையேற்றமும், பனிச்சறுக்கும் இந்திப் படங்களில் வந்தது போல் ஜாலியாக நாட்கள் கழிந்தது. எல்லோரும் ஹனிமூனுக்கு ஊட்டியா என்று கேட்டபோது விக்டர் ரோஸியின் முகத்தைப் பார்க்க, அவள் சிம்லா என்றதும் விக்டர் சிறிது கூட தயங்காமல் Ok சொன்னதும் நினைவில் வந்தது.

விக்டர் ரோஸியை சந்தித்ததே தற்செயலாக நடந்ததுதான். அவனுடன் சக வக்கீலாக உள்ள தாமஸ் வீட்டுக்குச் சென்ற போது அங்கு நடந்த உரையாடலைக் கேட்டு இவன் “சபாஷ், சரியான விவாதம்” என்று சொல்லி கைதட்டிக் கொண்டே உள்ளே சென்றதும் அப்படியே அந்தக் காட்சி கண்முன்னே தோன்றியது.தாமசும், தங்கை ஜூலி, சித்தப்பா மகள் ரோஸி மூவரும் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விக்டர் தன் அக்காள் பையன் டேவிட்டின் பிறந்த நாள் விழாவுக்கு அழைக்க வந்தவன் அங்கு நடந்த காரசாரமான விவாதத்தைக் கேட்டுத்தான் அப்படி கை தட்டினான். ரோஸியும் ஜூலியும் டிகிரி முடித்து விட்டு டீச்சர் ஆக பி.எட். படிக்க விரும்பினார்கள்.

அப்போது தாமஸ் அவர்களிடம் ‘ஏன் லா படிக்கலாமே’ என்றான். ஜூலி பதில் சொல்லாத போது ரோஸி மட்டும் ‘போதும் ேபாதும்’ என்றதும் ஏன் என்ற தாமஸுக்கு ‘லாயர்ஸ் ஸார் லையர்ஸ்’ என்றதும் தாமஸ் கோபித்து “ஏன் அப்படிச் சொல்ற” என்றான். குரல் சத்தமாக ஒலித்தது. “தன் கட்சிக்காரர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சட்டத்திலுள்ள இண்டு இடுக்கெல்லாம் தேடிப் பார்த்து நிறைய பொய்களை சொல்லி, நிறைய ‘பீஸ்’ வாங்கிக் கொண்டு வாதாடுவீர்கள்” என்றபோதுதான் விக்டர் அங்கு சென்று பேசியது.

விக்டரைப் பார்த்த ரோஸி ‘நான் போயிட்டு வரேன் ஜூலி’ என்று படியிறங்கிப் போய்விட்டாள்.அன்று இரவு முழுவதும் விக்டருக்கு தூக்கமே வரவில்லை. எத்தனையோ பெண்களைப் பார்த்தும், ஏன் அவன் கூடவே படித்த பெண்கள், இப்போதும் அவன் கூட வேலை பார்க்கும் பெண்கள் என எல்லோரிடமும் ஏற்படாத அந்த ஒரு ஈர்ப்பு ரோஸியைப் பார்த்ததும் ஏன் ஏற்பட்டது? இதுதான் போன ஜென்ம பந்தமோ? மணந்தால் ரோஸி இல்லையெனில் கல்யாணமே கிடையாது. அவள் பேசும் போது காதில் போட்டிருந்த குடை ஜிமிக்கியும் சேர்ந்து ஆடியதும், மீன் போன்ற அந்தக் கண்கள் சுழன்றதும், படி இறங்கும் போது கருநாகம் போன்ற பின்னலும், பாவாடை தாவணியில் ஒரு தேவதை போலத்தான் இருந்தாள்.

விக்டரின் அக்காள் பையன் டேவிட்டின் பிறந்த நாளுக்கு ரோஸியையும் அழைத்து வரும்படி ஜூலியிடம் விக்டர் விண்ணப்பம் செய்தான். அதற்கு அவள் முன்பின் தெரியாதவர்களின் வீட்டிற்குதான் வரமாட்டேன் என்று சொன்னதாகவும். ரோஸி நன்றாக படம் வரைவாள். எனவே, குழந்தையை பார்த்துக் கொண்டு அப்படியே அச்சு அசலாக வரைந்து விடுவாள் என்றும், அதை சொல்லி அழைத்து வருகிறேன் என்றும் குழந்தைகள் என்றால் ரோஸிக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் எதற்கும் நீங்களே நேரில் வந்து ‘இன்வைட்’ பண்ணினால் நல்லது என்று தோன்றுகிறது என்றும் சொன்னாள். ஜூலியின் அம்மாவைக் காக்காய் பிடித்து ‘‘நீங்கள்தான் ஆன்ட்டி, உங்கள் கோபக்கார மகளை அழைத்து வர வேண்டும். ரோஸி வரைந்த படங்களை ஜூலி காட்டியதைப் பார்த்தேன். மிகவும் திறமைசாலி.

அதனால்தான் அத்தனை பிடிவாதம், கோபம் வருகிறதோ? எப்படியோ நீங்க தாஜா பண்ணி அழைத்து வாங்க ஆன்ட்டி’’ என்று சொல்லும் போதே யதேச்சையாக அங்கே வந்த ரோஸியின் அம்மா மார்க்ரெட்டிடம் தாமஸின் அம்மா விக்டரை அறிமுகம் செய்து வைத்துவிட்டு, விஷயத்தை சொன்னதும், மார்க்ரெட் சரியென்று சொல்லி தாமஸ் அம்மா தன் அக்காள்தான், அவருடன் நானும் ரோஸியும் வருகிறோம் என்றதும் விக்டர் கார் அனுப்பி வைத்தான். அவர்களும் வந்தார்கள். ஃபங்ஷன் நன்றாக நடந்தது. குழந்தை டேவிட்டை ரோஸி நன்றாக வரைந்தாள். அப்போது விக்டர் பியானோ வாசித்தான். எல்லோரும் அசந்து போயினர். ‘ஒரு வானவில் போலே என் வாழ்வினில் வந்தாய். ஒரு பார்வையால் என்னை வென்றாய். என் உயிரிலே நீ கலந்தாய்’ என்று வாசித்தான்.

அவன் வாசிக்கும் போதே அவனையும் ரோஸி வரைந்தாள். உண்மையிலேயே அன்று விக்டர் ரொம்பவே அழகாக இருந்தான். மிகவும் மெனக்கெட்டு ‘ட்ரெஸ்’ பண்ணி இருந்தான். ‘இன்டிமேட் சென்ட்’ வாசம் அரங்கத்தையே மகிழ்வித்தது. ரோஸிக்கும் அவனைப் பிடித்து விட்டது.விக்டரின் அப்பா மிகச் சிறந்த மனிதர். பரம்பரை பணக்காரர். ஆனாலும் திமிர் இல்லாதவர். ஊரில் நல்ல ெபயர் வாங்கியவர். அவர் மனைவி ஜெனிஃபரும் நல்ல பெண்மணி. குடும்பமே நல்ல குடும்பம். விக்டரின் அக்காள் ரெஜினாவும், அவள் கணவரும் டாக்டர்கள். தம்பி அருளும் டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்தான்.

விக்டருக்கு வீட்டில் திருமணத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரோஸியைப் பார்த்ததும், அவர்களுக்கும் ரோஸியைப் பிடித்து விட்டது. பெரியவர்கள் மூலம் பேசி திருமணம் நிச்சயமாகி கல்யாணமும் முடிந்துவிட்டது. முதலில் ரோஸி விக்டரிடம் கேட்டுக் கொண்டது என்னவென்றால் “காசுக்காக நியாயமில்லாத வழக்குகளை எடுத்து நடத்தாதீர்கள். உண்மையான நிரபராதிகளின் வழக்குகளை மட்டும் ஏற்று நடத்துங்கள்.

பெயர், புகழ் இதற்காக பொய் வழக்குகளை எடுத்து நடத்துவது, ஏழை என்பதால் நிராகரிப்பது இதெல்லாம் செய்யாதீர்கள். மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள். இதுவே தேவனுக்குப் பிரியமானது. எனக்கும் அதுதான் பிடிக்கும்” என்பதுதான். விக்டரும் தான் அதே போல் நடந்து கொள்வதாக உறுதி கொடுத்தான். மேலும் தான் மேலே படிக்க அனுமதிக்க வேண்டுமென்றும் விண்ணப்பம் வைத்தாள். விக்டர் மட்டுமல்ல, வீட்டுப் பெரியவர்களும் அதில் விருப்பம் தெரிவிக்கவே, மண வாழ்க்கை எந்த ஒரு பிரச்னையும் இன்றி இனிமையாக சென்றது.

ரோஸி பி.எட் முடித்தாள். வீட்டிலுள்ள அனைவரையும் ஓவியம் வரைந்தாள். அவள் கையாலேயே செடி வளர்ப்பாள். விக்டரின் உடைகளை அவள் கையாலேயே மடித்து வைப்பாள். அத்தைக்கும் மாமாவுக்கும் முதலில் பரிமாறுவாள். விக்டர், அருண் இருவருடனும் சேர்ந்து இரவு நேரத்தில் கதை பேசிக் கொண்டே சாப்பிடுவாள். அருணைத் தம்பி என்றே கூப்பிடுவாள். வேலைக்காரர்களிடமும் கனிவோடு நடந்து கொள்வாள். எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விட்டாள்.

அவள் விருப்பப்படியே ஐந்து வருடம் கழித்தே ‘கன்ஸீவ்’ ஆனாள். வீட்டில் எல்லோருக்குமே மிகுந்த மகிழ்ச்சி.அந்த நாளும் வந்தது. அது அவளின் பிறந்த நாள். காலையில் நன்றாக இருந்தவளுக்கு திடீரென்று இடுப்பு வலி எடுத்ததும் எப்போதும் போகின்ற மருத்துவமனைக்குத்தான் விக்டர் காரில் அம்மா, அக்காவோடு அழைத்துச் சென்றான். மதியத்திற்கு மேல் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை. ரோஸிக்கு உதிரப்போக்கு நிற்காமல் இருந்ததாகவும், வலிப்பு வந்ததாகவும், மயக்கத்திலேயே இருந்ததாகவும், யாரையும் பார்க்க அனுமதிக்காமல், அவளை தீவிர சிகிச்சை கொடுக்க அழைத்து சென்றிருப்பதாகவும் தகவல் வந்ததே தவிர அவளைப் பார்க்க அனுமதியில்லை.

ரெஜினா மற்ற டாக்டர்களுடன் பேசிக் கொண்டு அங்குமிங்கும் சென்றாள். முகம் பூரா கவலை. எப்படி, எப்படி என்று கேட்டுக் கொண்டே அவள் தன் அம்மாவிடம் ரோஸி ஒழுங்காக மருந்து, மாத்திரை டானிக் எல்லாம் சாப்பிட்டாளா என்றெல்லாம் கேட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள். அப்போது அலைபேசி இல்லாத காலம். எல்லோருக்கும் இடியாக அந்த செய்தி வந்தது. குடும்பமே ஆடிப் போய் விட்டது. விக்டர் சுவற்றில் முட்டிக் கொண்டு அழுதான். அவள் விருப்பப்படியே மகளுக்கு ஏஞ்சலினா என்று பெயர்வைத்து ஏஞ்சல் என்று கூப்பிட்டான்.

அவளின் பிறந்த நாளே அவளுக்கு இறந்த நாளாக அமைந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவளுக்கு பிடித்த ரோஸும், ஒரு மலர் மாலையும் எடுத்துச் சென்று கல்லறையில் வைத்துவிட்டு வருவான். விக்டரின் தாய் மறுமணம் பற்றி பேசும் போது பிறகு சொல்கிறேன் என்றே சொல்லிச் சொல்லியே இருபத்தைந்து வருடம் ஓட்டி விட்டான்.ரோஸி கர்ப்பமாகியிருந்த போது ஒருநாள் அழுது கொண்டே ‘விக்டர், எனக்கு எதாச்சும் ஆனா நீங்க வேற கல்யாணம் செய்வீங்களா?’ என்றாள். ‘ஏன் ரோஸி இப்படியெல்லாம் அபசகுனமா பேசுற’ என்றான். இப்படி அடிக்கடி கேட்கவும் ஒருநாள் ‘மாட்டேன் ரோஸி.

ஆனா, உனக்கு ஒண்ணும் ஆகாது. பயப்படாத. பயமே பாதி ஆளைக் கொன்னுடும்’ என்றான். என்னவோ எனக்குள்ள மாற்றம் தெரியுது. ரெஜி அக்கா கூட ‘பயப்படாத, இதெல்லாம் சகஜம்’னு சொன்னாங்க. ‘ஆனா, எனக்கு பயமா இருக்கு விக்டர். நா போயிட்டா உங்கள யாரு கவனிச்சுக்குவாங்க விக்டர்? ஒன்னு சொல்றேன் விக்டர், இந்த ஒரு குழந்தையே போதும் விக்டர். என்னைத் தவிர வேற பொண்ணோட வெச்சு என் விக்டர நெனச்சுக்கூட பாக்க முடியல’ என்று சொல்லும் போதே அவளுக்கு மூச்சு வாங்கியது. ‘சத்தியமா சொல்றேன் நீ ஒருத்திதான் என் மனைவி. வேற யாரையும் உன் எடத்துல வச்சு பாக்க என்னாலயும் முடியாது’ ரோஸி என்று சொல்லி அவளைப் படுக்க வைத்து நன்கு போர்த்திவிட்டு ‘நிம்மதியா தூங்கு
டார்லிங்’ என்று சொல்லி நெத்தியில் முத்தமிட்டான்.

வருடங்கள் சென்றன. ரோஸியின் பிறந்த நாள் அதாவது, இறந்த நாள் வந்தது. விக்டர், ஏஞ்சல், டேவிட் மூவரும் போய் மலர் வைத்து மாலை போட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தனர். வீட்டில் மாட்டியிருந்த படத்திற்கு மாலை போட்டுவிட்டு, ‘ரோஸி உன்விருப்பப்படியே நம்ம பொண்ணுக்கு ஏஞ்சல் என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து டேவிட்டுக்கு மணம் செய்து கொடுத்துவிட்டேன். கடமையை முடித்துவிட்டேன். இனி மேல் நான் ஃப்ரீதான். கூடிய விரைவில் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு பியானோ வாசித்தான். வானவில் போலே பாட்டை வாசித்துக் கொண்டே தலை சாய்ந்து விட்டான்.

தொகுப்பு: கே.நாகலெட்சுமி

The post சிறுகதை-என் உயிரிலே நீ கலந்தாய்… appeared first on Dinakaran.

Tags : Angel ,David ,Victor ,Mary ,Rosie ,Shimla ,Kalantai ,
× RELATED தினமும் எனது கார் சோதிக்கப்படுகிறது;...