×

திருச்செந்தூர் கோயிலில் புதுமண தம்பதியினர் தவறவிட்ட நகையை மீட்டு கொடுத்த வியாபாரி

*பக்தர்கள் பாராட்டு

திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோயிலில் புதுமண தம்பதியினர் தவறவிட்ட நகையை வியாபாரி மீட்டு கொடுத்தார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள வாழவல்லானை சேர்ந்த புதுமணத் தம்பதியர் பால்ராஜ்- இசக்கிபிரியா. நேற்று முன்தினம் இவர்கள் தங்களது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தனர். அப்போது தூண்டிகை விநாயகர் கோயில் பகுதியில் பால்ராஜ் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் தவறி கீழே விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் புதுமண தம்பதியர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பலவேசகண்ணன் என்பவரது கடை முன்பு பிரேஸ்லெட் கீழே கிடந்ததை அவ்வழியாக சென்ற ஒருவர் எடுத்ததை பார்த்த பலவேசகண்ணன், அவரிடம் யாருடையது என்று கேட்டவுடன் அந்நபர் கீழே கிடந்ததாக கூறியுள்ளார். உடனே அதனை வாங்கிய பலவேசகண்ணன், தனது கடையில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபிறகு பிரேஸ்லெட்டை திருச்செந்தூர் கோயில் உள்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

மேலும் புதுமண தம்பதியர் கையில் இருந்து தவறி விழுந்துள்ளது, அதனை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள் எனக் கூறியுள்ளார். உடனடியாக கோயில் உள்துறை நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் இந்த தகவலை பக்தர்களுக்கு தெரிவித்தது. இதை கேட்ட புதுமண தம்பதியர் பால்ராஜ்- இசக்கிபிரியா இருவரும் அங்கு சென்று அடையாளத்தை கூறியதும் அவர்களிடம் பிரேஸ்லெட் ஒப்படைக்கப்பட்டது. பலவேச கண்ணனுக்கு புதுமண தம்பதியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். பக்தர்களும் அவரை பாராட்டினர்.

The post திருச்செந்தூர் கோயிலில் புதுமண தம்பதியினர் தவறவிட்ட நகையை மீட்டு கொடுத்த வியாபாரி appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple ,Tiruchendur ,Balraj-Ishakipriya ,Vazhavallan ,Eral ,Thoothukudi ,Tiruchendur Subramania ,
× RELATED திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள்