×

அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும்

வேலூர், மார்ச் 29: நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரே கட்டமாக வரும் 19ம்தேதி தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. முக்கிய கட்சி வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு முதற்கட்ட பயற்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலும், 4 மாநிலங்களில் சட்டமன்றதேர்தல் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் பணியில் லட்சக்கணக்கான மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக தனியாக ஊதியம் நிர்ணயம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மூத்த அதிகாரிக்கு ₹5,000, முதன்மை பயிற்றுநர் ₹2,000, வாக்குப்பதிவு தலைமை அலுவலர், வாக்கு எண்ணிக்கை சூப்பர்வைசர், அறை சூப்பர் வைசர் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ₹350ம், வாக்குப்பதிவு அலுவலர், எண்ணிக்கை உதவி அலுவலர் ஆகியோருக்கு ₹’250ம் மற்றும் கடைநிலை ஊழி யர்களுக்கு ஒரு நாளைக்கு ₹150ம் வழங்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு உணவு படிக்கு ₹150ம், வீடியோ கண்காணிப்புகுழு, வீடியோ பார்வையிடும் குழு, கணக்கு குழு, தணிக்கை கண்காணிப்பு குழு, தேர்தல் கண்காணிப்பு அறை, தகவல் மைய ஊழியர்கள், மீடியா சான்றிதழ் குழு, கண்காணிப்பு குழு, பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்பு குழு, செலவின கண்காணப்பு குழு உள்ளிட்ட குழுக்களில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு ₹1200 முதல் ₹1000 மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு ₹200ம் வழங்கப்படுகிறது. நுண்ணறிவு பார்வையாளர்களுக்கு ₹1000ம், உதவி தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு ₹7,500ம் வழங்கப்படுகிறது. வாக்குச்சாவடி உதவியாளருக்கு ₹250ம், தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள குழுக்களின் அலுவலர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் செய்ய ₹500ம் வழங்கப்படுகிறது. இதுதவிர தேர்தல் பணிக்காக பயிற்சிக்கு செல்லும்போது 4 நாட்களும், தேர்தலின் வாக்குப்பதிவுக்கு வாக்குச்சாவடிக்கு செல்லும்போது 2 நாடகளும் தேர்தல் பணி செய்த நாட்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Vellore ,Tamil Nadu ,Puduvai ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடும்...